ஆன்லைன் ராஜா 12: திட்டம் தயார்!

By எஸ்.எல்.வி மூர்த்தி

ஸ்

டூவர்ட் டிரஸ்ட்டி ஜாக் மாவை அலுவலத்துக்குள் அழைத்துக்கொண்டு போனார். இருபதுக்கும் அதிகமான கம்ப்யூட்டர்கள். இத்தனை கம்ப்யூட்டர்களை இதுவரை ஜாக் மா சீனாவின் கடைகளில் கூட ஒருசேரப் பார்த்ததில்லை. மாயாஜாலம். ஆனந்தப் பரவச மானார்.

ஸ்டூவர்ட் டிரஸ்ட்டி ஜாக் மாவை ஒரு கம்ப்யூட்டர் அருகே கூட்டிக்கொண்டு போனார்.

``எல்லாக் கம்ப்யூட்டர்களையும் இன்டர்நெட்டோடு இணைத்திருக்கிறோம்.”

ஜாக் மாவுக்குப் புரியவில்லை. ‘‘அப்படி யென்றால்….”

ஸ்டூவர்ட் டிரஸ்ட்டி இன்டர்நெட் எப்படி இயங்குகிறது, தேடுபொறி மூலம் எப்படி இணையத்தில் தகவல்களைத் தேடலாம் என்று விளக்கினார். எளிமையாகத்தான் சொன்னார். ஆனால், ஜாக் மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. தலை சுற்றியது. அவர் கம்ப்யூட்டர்களையே தொட்டதில்லை. எப்படிப் புரியும்? செய்முறை விளக்கம் தந்தால் அவருக்குப் புரியலாம் என்று ஸ்டூவர்ட் டிரஸ்ட்டி நினைத்தார்.

``ஜாக் மா, உங்களுக்கு விருப்பமான ஏதா வது ஒரு வார்த்தையை டைப் செய்யுங்கள்.”

``நானா?”

“ஆமாம். நீங்களேதான்.”

ஜாக் மா கம்ப்யூட்டரை இத்தனை அருகாமையில் பார்ப்பதும், தொடுவதும் வாழ்க்கையில் முதல் அனுபவம். கம்ப்யூட்டரைக் கெடுத்துவிடுவோமோ என்று உடலில் நடுக்கம். அதே சமயம் நரம்பு நாடிகள் முழுக்க ஆனந்தப் புல்லரிப்பு.

கீ போர்ட் மேல் விரல்களை வைத்தார். நாம் புதுப் பேனா கிடைத்தால், முதலில் என்ன வார்த்தை எழுதுவோம்? கம்ப்யூட்டரில் எந்த முதல் வார்த்தை டைப் செய்வோம்? நம் பெயர்தான்! ஜாக் மா ஜாலி மனிதர், குறும்புக்காரர். என்ன செய்தார் ஜெரியுமா?

மயிலிறகால் வருடுவதுபோல் கீ போர்டைத் தொட்டார். கொஞ்சம் பயம், மிஞ்சும் பரவசம்.

முதல் எழுத்து B.

திரையில் B பளிச். மாபெரும் சாதனை நிகழ்த்திவிட்டது போல் அவர் உடலில் உற்சாக ஊற்று.

அடுத்த எழுத்து டைப் செய்தார். E.

மூன்றாம் எழுத்து - E.

கடைசி எழுத்து, நான்காம் எழுத்து – R.

ஜாக் மா கம்ப்யூட்டரில் டைப் செய்த முதல் வார்த்தை BEER. ஆமாம், பீர்!

அற்புத விளக்கை அலாவுதீன் தேய்த்ததும், பூதம் ஓடிவந்து அவன் இட்ட கட்டளையை நிறைவேற்றியதுபோல், ஜாக் மா கீ போர் டைத் தட்டியவுடனேயே, பீர் பற்றிய விவரங் கள் கம்ப்யூட்டர் வெள்ளித்திரையில் கொட் டின.

அமெரிக்க பீர்கள், ஜெர்மன் பீர்கள்

ஜாக் மா “CHINA BEER” என்று டைப் செய்தார். ``விவரம் எதுவும் இல்லை” என்றது வெள்ளித்திரை. சீனாவில் வகை வகையான பீர்கள் இருக்கின்றன. கம்ப்யூட்டர் ஏன் கையை விரிக்கிறது என்று ஏமாற்றம். “CHINA” என்று டைப் செய்தார். சீனாவின் வரலாறு, பண்டைய நாகரிகம் பற்றிச் சுமார் பன்னிரெண்டு வாக்கியங்கள். ஜாக் மா மனம் உடைந்து போனார். “எத்தனை தொழில்வளம் என் திருநாட்டில்? ஏன் அந்த விவரங்கள் இல்லை இணையத்தில்?” என்னும் தார்மீகக் கோபம்.

``சீனா பற்றிய ஏதாவது விவரங்களை நாம் இணையத்தில் ஏற்ற முடியுமா?”

``நிச்சயமாக.”

தன் ஹாங்ஸெள ஹைபோ மொழிபெயர்ப்பு ஏஜென்சி பற்றிய விவரங்களை ஜாக் மா ஸ்டூவர்ட் டிரஸ்ட்டியிடம் தந்தார். அவர் சொன்னார், ``இதோ இந்த விவரங்களை இணையதளத்தில் லோட் செய்கிறேன். உங்கள் கம்பெனி பற்றித் தெரிந்துகொள்ள யாராவது ஆர்வம் காட்டினால் உங்களுக்குச் சொல்கிறேன்.”

தன் துக்குனூண்டுக் கம்பெனியை யார் கண்டுகொள்ளப் போகிறார்கள் என்னும் நினைப்பு ஜாக் மாவுக்கு. மூன்று மணி நேரங்கள். ஸ்டூவர்ட் டிரஸ்ட்டியிடமிருந்து போன்.

“ஜாக் மா, உங்களுக்கு ஐந்து ஈ மெயில்கள் வந்திருக்கின்றன.”

“இ மெயில் என்றால்….”

“இ மெயில் என்றால், உங்கள் கம்பெனியின் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள, இன்டர்நெட் வழியாக வந்திருக்கும் கடிதங்கள். அமெரிக்காவிலிருந்து மூவர், ஜப்பானிலிருந்து ஒருவர், ஜெர்மனியிலிருந்து ஒருவர் ஹைபோவின் மொழிபெயர்ப்புச் சேவை யைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார் கள்.”

ஜாக் மாவுக்கு நடப்பது கனவா, நிஜமா என்னும் திகைப்பு. ஒரு புது கஸ்டமர் கிடைக்க அவர் லோ லோ என்று நாள் கணக்காக அலையவேண்டும், இங்கோ, ஐந்து கஸ்டமர்கள் மூன்றே மணி நேரத்தில். அதுவும், அடுத்த வீட்டு, பக்கத்துத் தெரு ஆட்களல்ல, மூன்று வெளிநாடுகளிலிருந்து. இன்டர்நெட்டுக்கு இத்தனை சக்தியா? அவருடைய சுண்டைக்காய் கம்பெனியையே கால் காசு செலவிடாமல் உலகத்தின் கவன வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துவிட்டதே? சீனா தொழில்நுட்பத்தை உள்வாங்கி, மிகக் குறைவான விலையில் தரமான பொருட்கள் தயாரிக்கும் அதீதத் திறமைசாலிகள் நிறைந்த தேசம். இன்டர்நெட் மூலமாக இந்த விவரங்களை உலகறிய வைத்துவிட்டால், ஏழைச் சீனா வல்லரசாகும். இந்த மாற்றத்துக்கு அவர் கிரியாஊக்கியாக வேண்டும்.

ஸ்டூவர்ட் டிரஸ்ட்டி வழிகாட்டலில் ஜாக் மாவின் பிசினஸ் திட்டம் வடிவெடுக்கத் தொடங்கியது. ஏற்றுமதி செய்ய விரும்பும் சீன நிறுவனங்களை அவர் தொடர்பு கொண்டு விவரங்கள் சேகரிக்கவேண்டும். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஸ்டூவர்ட் டிரஸ்ட்டிக்கு அனுப்பவேண்டும். அவர் தேவையான படங்கள் சேர்த்து, டிசைன் செய்து இணையத்தில் ஏற்றுவார். இந்தச் சேவைக்குச் சீனக் கம்பெனிகள் கட்டணம் தரவேண்டும். இந்தக் கட்டணம் சிறிய தொகையாக இருக்கவேண்டும் என்பது ஜாக் மா முடிவு. இணையம் என்றால் என்னவென்றே தெரியாததால், அதிக விலை வைத்தால் எல்லோரும் ஓடிவிடுவார்கள். மலிவு விலை வைத்தால் எப்படி லாபம் வரும்? ஜாக் மா கணக்கு அந்நியன் கணக்கு. அஞ்சு கோடிக் கம்பெனிகள் அஞ்சு கோடித் தடவை அஞ்சு அஞ்சு பைசா கட்டணமாகத் தந்தால்……அவர் பிசினஸ் கல்லாவில் பல கோடிகள் கொட்டும்.

ஜாக் மா தன் சேவைக்கு, சீனா பக்கங்கள் (China Pages) என்று பெயர் வைத்தார்.

(கம்பெனிகளை அவை வழங்கும் சேவை / தயாரிக்கும் பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வரிசைப்படுத்தி, அந்த கம்பெனிகள் பற்றிய விவரங்கள், தொடர்பு விலாசம், தொலைபேசி எண்கள் போன்ற விவரங்கள் தரும் பக்கங்கள் இவை. 1886 – ஆம் ஆண்டு, ரூபென் டோனெல்லி (Reuben Donnelley) என்னும் அமெரிக்கர் அமெரிக்காவில் இத்தகைய கையேட்டை முதன் முதலாக உருவாக்கினார். தனித்துவம் காட்டுவதற்காகத் தன் வெளியீட்டை மஞ்சள் நிறக் காகிதத்தில் அச்சிட்டார். இதனால், இத்தகைய கையேடுகள் மஞ்சள் பக்கங்கள் (Yellow Pages) என்று அழைக்கப்படுகின்றன. சீனா பக்கங்கள் போன்ற வெளியீடுகள் மஞ்சள் பக்கங்களின் இணைய அவதாரங்கள்.)

ஜாக் மாவுக்கு இப்போது ஒரே ஒரு குறிதான். சீனா திரும்பவேண்டும், தன் இணையக் கனவை நனவாக்கவேண்டும். கம்பெனியின் ஆரம்பப் புள்ளியாக ஒரு கம்ப்யூட்டர் வாங்கிக்கொண்டார். ஸ்டூவர்ட்டியிடம் விடை பெற்றுக்கொள்ள அவர் அலுவலகம் போனார். தலையில் இடி விழுந்தது.

அந்தப் பக்கா பிசினஸ்மேன் சொன்னார், “உங்களுக்கு வேண்டிய அத்தனை உதவிகளும் செய்கிறேன். உங்களுடையதைத் தவிர வேறு எந்தச் சீன கம்பெனியோடும் கை கோர்க்க மாட்டேன் என்று ஒப்பந்தம் போடத் தயார். ஒரே ஒரு நிபந்தனை.”

“என்ன?”

“என் ஒத்துழைப்புக்கு நீங்கள் 2 லட்சம் டாலர்கள் கட்டணம் தர வேண்டும்.”

(அன்றைய மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாய்.)

இரண்டு லட்சம் டாலரா? ஜாக் மாவுக்குத் தலை சுற்றியது. அவர் மொத்தச் சொத்தும் இரண்டாயிரம் டாலர்கள் தேறாது. பில் அஹோவுக்கு போன் செய்து நடந்ததைச் சொன்னார்.

சிறிது நேரம் ஓடியது. பில் அஹோவிடமிருந்து பதில் அழைப்பு.

“என் மருமகன் கறார் பேர்வழி. தன் கட்டணத்தைக் குறைக்கத் தயாராக இல்லை.”

“அப்படியானால், என் பிசினஸ் திட்டம்?”

“பயப்படாதீர்கள். நானும் என் மனைவியும் ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறோம்.”

“என்ன வழி?”

”ஸ்டூவர்ட்டிடம் பேசினேன். சில சலுகைகள் வாங்கியிருக்கிறோம். நீங்கள் 2 லட்சம் டாலர் பணத்தை உடனே தர வேண்டியதில்லை. ஐந்து வருடங்களுக்குள் தந்தால் போதும். நீங்கள் கட்டாயம் தந்துவிடுவீர்கள் என்பதற்கு நானும், என் மனைவியும் உத்தரவாதக் கையெழுத்திடச் சம்மதித்திருக்கி றோம்.”

சாதாரண உதவியா இது? படகில் கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளிப்பவனின் உயிர் காக்கும் துடுப்பு.

“தாங்க் யூ வெரி மச்.”

மனத்தில் பொங்கிய நன்றியின் சிறுபகுதியைக்கூட வெளிப்படுத்த முடியாத பலவீன வார்த்தைகள்.

இத்தனை நண்பர்கள் யானை பலமாக இருக்கும்போது எந்த முயற்சியிலும் துணிந்து இறங்கலாம் என்னும் துணிச்சல் ஜாக் மாவுக்கு வந்தது. அதே சமயம், மனம் நிறையக் கேள்விகள். சீனா திரும்பியவுடன் நண்பர்களுடனும், மனைவியுடனும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

சீனா திரும்பினார். ஆக்ஷன் ஸ்டார்ட்.

(குகை இன்னும் திறக்கும்)

slvmoorthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்