சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு நீட்டிப்பு: வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மறு அறிவிப்பு வரும் வரை சர்க்கரை ஏற்றுமதிக்கான தடை நீட்டிக்கப்படுவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது.

சர்க்கரையின் விலை உள்நாட்டில் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கடந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் அடுத்த ஓராண்டுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்ய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தடை விதித்தது. இதில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த விலக்கு அளிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை அடுத்து கச்சா சர்க்கரை, வெள்ளை சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, இயற்கை சர்க்கரை ஆகியவற்றின் ஏற்றுதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், சர்க்கரையின் விலை உள்நாட்டில் அதிகரிக்காமல் தடுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுக்கான கெடு முடிவடைய உள்ள நிலையில், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் மீண்டும் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து வித சர்க்கரை ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பாசுமதி அரிசி இல்லாத பிற அரிசி ரகங்களை ஏற்றுமதி செய்வதற்கும் கடந்த ஜூலையில் தடை விதிக்கப்பட்டது. உள்நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும், தங்கள் நாட்டுக்கு அரிசி ஏற்றுமதி செய்யுமாறு எந்தெந்த நாடுகள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கிறதோ, அவற்றில் எந்தெந்த நாட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கப்படுகிறதோ அந்த நாடுகளுக்கு அரிசி ஏற்றுதி செய்யப்படும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், நேபாள், கேமரூண், கோடி டி லோவிரி, கிணியா, மலேசியா, பிலிப்பின்ஸ், ஷீஷெல்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அரிசி ஏற்றுதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்தியாவில் இருந்து அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடாக பெனின் உள்ளது. அதற்கடுத்த இடங்களில் ஐக்கிய அரபு அமீரகம், நேபாள், பங்களாதேஷ், சீனா, கோடி டி லோவிரி, தோகோ, செனகல், கிணியா, வியட்நாம், ஜிபோதி, மடகாஸ்கர், கேமரூண், சோமாலியா, மலேசியா, லிபெரியா ஆகிய நாடுகள் உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE