ஆயுத பூஜை வர்த்தகம்: கிருஷ்ணகிரியில் பொரி உற்பத்தி 30% சரிவு

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயுத பூஜை வர்த்தகத்தில் பொரி தயாரிப்பு கடந்தாண்டை விட உற்பத்தியும், விற்பனை ஆர்டரும் சரிந்துள்ளதால், வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் வரும் அக்.23 மற்றும் 24-ம் தேதிகளில் ஆயுத பூஜை, விஜய தசமி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட மண்டிகளில் பொரி தயாரிக்கும் பணி கடந்த 20 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பொரி கேரளா, ஆந்திர மாநிலம் சித்தூர், குப்பம் மற்றும்

தமிழகத்தில் வேலூர், சென்னை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்குச் செல்கிறது. நிகழாண்டில், பொரி தயாரிப்பு மூலப்பொருட்களின் விலை உயர்ந்த போதிலும், பொரியின் விலையை உயர்த்தாமல் வியாபாரிகள் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக கிருஷ்ண கிரியில் 4 தலைமுறைகளாக பொரி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கிருஷ்ணகுமார் (70) மற்றும் செந்தில் ஆகியோர் கூறியதாவது: பொரி உற்பத்தி செய்வதற்காக கொல்கத்தா, ஒடிசா, பர்துவான், கர்நாடகா மாநிலம் மைசூரு, சத்தீஸ்கர் மாநிலம் உள்ளிட்ட பகுதியிலிருந்து பதப்படுத்தப்பட்ட அரிசியைக் கொள்முதல் செய்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் அரிசியின் விலை உயர்ந்து வருகிறது. கடந்தாண்டு ஒரு கிலோ அரிசியை ரூ.34-க்கு கொள்முதல் செய்தோம். தற்போது, ரூ.42-க்கு கொள்முதல் செய்கிறோம். அதேநேரம், கூலி ஆட்களின் சம்பளம் மற்றும் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பொரி வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் கிடைக்கவில்லை.

பொரியை கொள்முதல் செய்த வியாபாரிகள் 50 சதவீதம் மண்டிகளுக்கு திரும்பி அனுப்பி விட்டனர். இதனால், நிகழாண்டில் மொத்த வியாபாரிகளிடமிருந்து இதுவரை 50 சதவீதம் ஆர்டர் மட்டுமே வந்துள்ளன. கடந்த சில ஆண்டுக்கு முன்பு வரை தினசரி சராசரியாக 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட 600 மூட்டைகள் பொரி தயாரிக்கப்பட்டது,

தற்போது, 400 மூட்டை என 30 சதவீதத்துக்கு மேல் உற்பத்தி குறைந்துள்ளது. ஒரு படி ரூ.12-க்கும், 100 லிட்டர் மூட்டை ரூ.450-க்கும் விற்பனை செய்து வருகிறோம். இதனால், எங்களுக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. இந்தாண்டு எங்களுக்கு ஒரே ஆறுதல் மழை இல்லாமல் இருப்பதால், அரிசியை நன்றாக காய வைக்க முடிகிறது.

மாவட்டத்தில் உள்ள மண்டிகளில் இருந்து நிகழாண்டில் அதிகபட்சமாக 2 லட்சம் மூட்டை விற்பனைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE