சேலம் வழியாக பெங்களூரு - கொச்சி இடையே விமானம் இயக்கம்

By செய்திப்பிரிவு

சேலம்: சேலம் விமான நிலையத்தில் இருந்து, 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது. சேலம் வழியாக, கொச்சி மற்றும் பெங்களூருவுக்கு வாரத்தில் 5 நாட்கள் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

சேலத்தை அடுத்த காமலாபுரத்தில் அமைந்துள்ள விமான நிலையத்தில், சேலம்- சென்னை இடையே ட்ரூஜெட் நிறுவனம் சார்பில் விமானம் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கரோனா தொற்றுப் பரவலின் காரணமாக, கடந்த 2021-ம் ஆண்டு ஜூனில், சேலத்தில் இருந்து விமானம் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக, சேலத்தில் இருந்து விமான சேவை நடைபெறவில்லை. சேலம் விமான நிலைய ஆலோசனைக் கூட்டத்தின்போது, சேலம் எம்பி., பார்த்திபன் மற்றும் பல்வேறு அமைப்பினர் சேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட வேண்டும் என்று தீர்மானங்களை நிறைவேற்றி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, உடான் - 5 திட்டத்தின் கீழ் அலையன்ஸ் மற்றும் இண்டிகோ நிறுவனங்கள், அக்டோபர் மாதத்தில் இருந்து சேலத்துக்கு விமானங்களை இயக்குவதற்கு முன் வந்தன. அதன்படி, அலையன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெங்களூரு - சேலம் - கொச்சி வழித் தடத்தில் இயக்கப்படும் முதல் விமானம், பெங்களூருவில் இருந்து நேற்று மதியம் சேலம் விமான நிலையத்துக்கு வந்தது.

72 இருக்கைகளுடன் கூடிய இந்த விமானத்தில் முதல் நாளான நேற்று, 27 பயணிகள் சேலம் வந்தனர். இதேபோல், அந்த விமானம் சேலத்தில் இருந்த கொச்சிக்கு 17 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இதனிடையே, சேலம் விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, சேலம் ஆட்சியர் கார்மேகம், எம்பி., பார்த்திபன் ஆகியோர் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

மேலும், சேலத்தில் இருந்து கொச்சி புறப்பட்டு சென்ற விமானத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் சேலம் மேயர் ராமச்சந்திரன், எம்எல்ஏ.,-க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சேலம் எஸ்பி., அருண் கபிலன், விமான நிலைய இயக்குநர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் செல்வ கணபதி, முன்னாள் எம்எல்ஏ., சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE