கோவை: கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு 600 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள நிபந்தனை குறித்து விமான நிலைய ஆணையகம் பரிசீலித்து வருகிறது.
நிலத்தை பெற காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் விரிவாக்க திட்டப் பணிகள் முடங்கியுள்ளன. கோவை சர்வதேச விமான நிலையத்தை ஆண்டுதோறும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் சராசரியாக 25 விமானங்கள் இயக்கப்படுகின்றன. உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
கோவை விமான நிலையத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு கடந்த 2010-ம் ஆண்டு 627 ஏக்கரில் விரிவாக்க திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. பல ஆண்டுகளாக முடங்கி கிடந்த இத்திட்டம், திமுக அரசு பொறுப்பேற்ற பின் நில ஆர்ஜித பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் வேகமெடுத்தன.
தற்போது 600 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு ஒப்படைக்க தயாராக உள்ளது குறித்து விமான நிலைய நிர்வாகத்திடம் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குத்தகை அடிப்படையில்தான் ஒப்படைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது.
இதனால் ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தை பெறுவது தொடர்பாக விமான நிலைய ஆணையக ( ஏஏஐ ) தலைமையகம் தரப்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, விரிவாக்க திட்டத்துக்கு தேவையான ஓடுபாதை நீளத்தை அதிகரித்தல், சர்வதேச தர அந்தஸ்துக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை தொடங்க முடியாமல் திட்டம் முடங்கியுள்ளது.
இது குறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, “கோவை விமான நிலையத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கைக் கேற்ப உள் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக தொடங்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் தற்போது இருக்கும் இடத்தை வைத்து தேவையான அளவு உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு விட்டன.
இதற்கு மேல் நிலம் இருந்தால்தான் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த முடியும். நிலத்தை பெறுவது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து ஆணையகம் தரப்பில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இறுதி முடிவு வந்தால் தான் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்” என்றனர்.
மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கூறும்போது, “கோவை விமான நிலையத்தில் விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த மொத்தம் உள்ள 627 ஏக்கரில் 600 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு ஒப்படைக்க தயார் நிலையில் உள்ளது. மீதமுள்ள சிறிதளவு நிலத்துக்கான ஆர்ஜித பணிகளும் இம்மாத இறுதிக்குள் முடிந்து விடும்.
நிலங்களை பெறுவது தொடர்பாக இதுவரை விமான நிலைய நிர்வாகம் தரப்பில் எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. தமிழக அரசு விதித்துள்ள நிபந்தனை குறித்து அவர்கள் தரப்பில் கடிதம் மூலம் ஏதேனும் தகவல் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டால் அது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
கொங்கு குளோபல் போரம் ( கேஜிஎப் ) இயக்குநர் நந்த குமார் கூறும்போது,‘‘கோவை மட்டுமின்றி ஒட்டுமொத்த கொங்கு மண்டல வளர்ச்சிக்கு விமான நிலை விரிவாக்க திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டியது மிக அவசியம். விமான நிலைய ஆணையகம் மற்றும் தமிழக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விரைவில் நிலங்களை பெற்று உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago