மஞ்சள் சாமந்தி பூ விலை வீழ்ச்சியால் தருமபுரி விவசாயிகள் கவலை

By எஸ்.செந்தில்

அரூர்: தருமபுரி மாவட்டத்தில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதி களில் அதிகளவில் விவசாயிகள் பூக்களை பயிர் செய்து வருகின்றனர்.

குண்டுமல்லி, சன்னமல்லி, ரோஜா, அரளி, சாமந்தி, செண்டு மல்லி, சாதி மல்லி, காகட்டான், கனகாம்பரம், பட்டன் ரோஜா, பன்னீர் ரோஜா உள்ளிட்ட பல்வேறு பூக்களை பயிர் செய்து வருகின்றனர். கடத்தூர், ரேகஅள்ளி, ஜாலியூர், தாளநத்தம், புட்டிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, மஞ்சவாடி, காளிப்பேட்டை, தொப்பூர், காளிக்கரம்பு, அய்யம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக சவுந்தர ரோஜா, அரளி, சாமந்தி பயிர் செய்து வருகின்றனர்.

இங்கிருந்து சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இப்பகுதியில் இருந்து சாமந்தி, அரளி, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்டவை தினசரி 10 டன் அளவிற்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் பெங்களூரு பூ மார்க்கெட்டிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிக அளவு பூக்கள் வருவதால் கடந்த சில மாதங்களாக பூக்களின் விலை குறைந்துள்ளது.

குறிப்பாக, கிலோ ரூ.40 வரை விற்ற மஞ்சள் சாமந்தி தற்போது கிலோ ரூ.20-க்கு விற்பனையாகிறது. இதனால் மலர் விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறும் போது, நவராத்திரி, ஆயுதபூஜை சீசனையொட்டி இப்பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் மஞ்சள் சாமந்தி பயிர் செய்துள்ளனர். ஆனால், தற்போது ஒரு கிலோ சாமந்தி பூ ரூ.20-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புரட்டாசி மாதத்தில் வழக்கமாக அதிக விலை கிடைக்கும் என்ற நிலையில் தற்போதைய விலை உற்பத்தி செலவில் நான்கில் ஒரு பங்குக்குக் கூட வரவில்லை. இதனால் சில விவசாயிகள் சாமந்தி பூவை அறுவடை செய்யாமலேயே விட்டுள்ளனர். ஆயுத பூஜை, தசரா விழாவையொட்டி விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE