ஆரஞ்சு வகை பட்டியலில் இருந்து வெள்ளை வகை பட்டியலுக்கு தென்னைநார் தொழில் மாற்றம்

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு என்ற ஆரஞ்சு வகை கட்டுப்பாடுகளை திரும்பப்பெற்று தென்னை நார் உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 1200 தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் பொள்ளாச்சியில் மட்டும் 750-க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாசுகட்டுப்பாட்டு வாரியம், தென்னை நார் உடைத்தல், டி-பைபர், பித் பதப்படுத்துதல் ஆகிய தொழில்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைவதாக கூறி,

சுற்றுச்சூழல் பாதிப்பு என குறிப்பிடும் வகையில் தென்னைநார் தொழிலை கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி ஆரஞ்சு வகை பட்டியலுக்கு மாற்றியது. மேலும் தென்னைநார் தொழிற்சாலைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த கட்டுப்பாடுகளால் தென்னைநார் உற்பத்தி தொழில் நலிவடைந்தது. பலர் தொழிற்சாலைகளை மூடிவிட்டு தொழிலை விட்டு வெளியேறும் அளவுக்கு பாதிப்பு தீவிரமடைந்தது. ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்தனர்.

ஆரஞ்சு வகை பட்டியலுக்கு மாற்றப்பட்டதை திரும்பப் பெற வேண்டும், கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என தென்னை நார் உற்பத்தியாளர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய குழுவினர் தென்னைநார் உற்பத்தி செய்யும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டனர்.

இதையடுத்து, தென்னைநார் தயாரித்தல், டி-பைபர்,பித் பதப்படுத்துதல் தொழில் ஆகியவற்றை ஆரஞ்சு வகை பட்டியலில் வகைப்படுத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கையை திரும்பப் பெறுவதாக கடந்த 12-ம் தேதி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து அசோசியேசன் ஆஃப் கோகோ பீப்பிள்ஸ் அமைப்பினர் கூறும்போது, ‘‘கரோனா கால கட்டுப்பாடுகளால் தொழில்கள் முடங்கிய நிலையில் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த தொழிலை ஆரஞ்சு வகை பட்டியலுக்கு மாற்றியது. இது தொழிலில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது.

உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி கடும் சரிவை சந்தித்தது. தொடர்ந்து மின் கட்டண உயர்வால் தென்னை நார் தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. பலரும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் தென்னை நார் தொழிலை ஆரஞ்சு வகை பட்டியலுக்கு மாற்றியதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் வெள்ளை வகை பட்டியலுக்கு மாறியது மகிழ்ச்சி அளிக்கிறது. இதே போல் மின்கட்டண உயர்வையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்,’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE