காலநிலை மாற்றம், வவ்வால்களால் பேரிக்காய் விளைச்சல் பாதிப்பு: கொடைக்கானல் விவசாயிகள் கவலை

By ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காலநிலை மாற்றம், வவ்வால்களால் பேரிக்காய் விளைச்சல் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கொடைக்கானல், வில்பட்டி, பள்ளங்கி, வடகவுஞ்சி, பெருமாள்மலை, கோம்பை, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாட்டு பேரிக்காய், தண்ணீர் பேரிக்காய், ஊட்டி பேரிக்காய், வால் பேரிக்காய் மொத்தம் 546 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை பேரிக்காய் சீசன் களைகட்டும். இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு அதிக அளவில் அனுப்பப்படுகின்றன இந்த ஆண்டு ஜூன் மாதம் சீசன் தொடக்கத்தில் தொடர் மழை, கரும்புள்ளி நோய் தாக்குதலால் விளைச்சல் பாதித்தது.

நவராத்திரி விழா காலங்களில் விற்பனைக்கு அனுப்ப ஏதுவாக பேரிக்காய் விளைச்சல் கைக்கொடுக்கும் என எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. சீதோஷ்ண நிலை மாற்றம் மற்றும் வவ்வால்கள் பேரிக்காய்களை உட்கொண்டு சேதப்படுத்தியதால் விளைச்சல் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

பேரிக்காய்களும் தரம் குறைவாக இருப்பதால் விலையும் வீழ்ச்சியடைந்து ஒரு கிலோ ரூ.35-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மலைப்பகுதிகளில் பழப்பயிர்களை சேதப்படுத்தும் வவ்வால்களை வனத்துறையினர் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து கொடைக்கானல் செண்பகனூரைச் சேர்ந்த விவசாயி அபுதாஹிர் கூறியதாவது: “நடப்பு ஆண்டில் சீசன் தொடக்கத்திலேயே நோய் தாக்குதலால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. ஆண்டுதோறும் நவராத்திரி விழாவின் போது இங்கிருந்து டன் கணக்கில் பேரிக்காய்கள் விற்பனைக்கு அனுப்பப்படும். ஆனால், இம்முறை கொடைக்கானல் மட்டுமின்றி தேனி, பழநி பகுதிகளில் இருந்து படையெடுத்து வந்த வவ்வால்கள் பேரிக்காய்களை சேதப்படுத்தியும், பாதி உட்கொண்டபடி விட்டு சென்றுள்ளதால் விளைச்சலும், விற்பனை பாதித்துள்ளது. அதனால் வியாபாரிகள் கொள்முதல் செய்வது குறைந்துள்ளது. இதனால் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்வதே பெரிய போராட்டமாக இருக்கிறது.

காலநிலை மாற்றம், வவ்வால்கள் சேர்ந்து விவசாயிகளை பாதிப்படைய செய்துள்ளது. ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்றால் மட்டுமே விவசாயிகளுக்கு ஓரளவுக்கு கட்டுப்படியாகும். விளைச்சலும், விலையும் இல்லாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE