அருப்புக்கோட்டையில் தயாராகும் வாழைநார் பட்டு சேலைகள்!

By இ.மணிகண்டன்

அருப்புக்கோட்டை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாழைநார் பட்டுச் சேலை உற்பத்தி அருப்புக்கோட்டையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அருப்புக்கோட்டையில் 1,500-க்கும் மேற்பட்ட கைத்தறிக் கூடங்களும், 15 ஆயிரத்துக்கும் அதிகமான விசைத்தறிக் கூடங்களும் உள்ளன. பாலிகாட்டன், பருத்தி, புட்டா ரகங்கள் தவிர 60-60, 80-60, 80-120 என பல்வேறு நூல் ரகங்களில் விசைத்தறி சேலைகள் நெய்யப்படுகின்றன. கைத்தறியில் பருத்திப் புடவைகள் மட்டுமே பெரும்பாலும் நெய்யப்படுகின்றன. அதோடு, வாழை நார் பட்டுச் சேலைகளும் கைத்தறியில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைத்தறியில் தயாரிக்கப்படும் வாழை நார் பட்டுச் சேலை உற்பத்தி அருப்புக்கோட்டையில் விறுவிறுப்பு அடைந்துள்ளது. சின்னத்திரை நட்சத்திரங்கள், விளம்பர நடிகைகள் விரும்பி வாங்கும் இந்த ரக வாழை நார் பட்டுப் புடவைகளுக்கு அண்மைக்காலமாக வரவேற்பு அதிகரித்துள்ளது.

சுப்புராஜ்

இதுகுறித்து அருப்புக்கோட்டையில் பல தலைமுறைகளாக கைத்தறி சேலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சுப்புராஜ் (60) கூறியதாவது: 30 ஆண்டுகளுக்கு முன்பு சின்னாளபட்டு சேலைகள் அருப்புக்கோட்டையில் உற்பத்தி செய்யப்பட்டன. இவை, சின்னாளபட்டி சேலை அல்லது சின்னாளபட்டு சேலைகள் என அழைக்கப்பட்டாலும், அவை அனைத்தும் அருப்புக்கோட்டையில்தான் உற்பத்திசெய்து அனுப்பிவைக்கப்பட்டன.

தற்போது, ஏராளமான கைத்தறி ரக சேலைகள் உற்பத்தி செய்யப்படுவதோடு, வாழை நார் பட்டுச் சேலை உற்பத்தியும் கடந்த சில ஆண்டுகளாக பிரபலம் அடைந்துள்ளது. தமிழகத்தில் வேறு எங்கும் வாழை நார் பட்டுசேலை உற்பத்தி செய்யப்படுவதில்லை. குஜராத் மாநிலத்தில் வாழை மட்டையிலிருந்து நூல் தயாரித்து அனுப்பப்படுகிறது. அவற்றுக்கு வண்ணச் சாயம் கொடுத்து தறிக்கு சேலை நெய்ய அனுப்புகிறோம். கைத்தறியில் குறிப்பாக குழித்தறியில் இந்த வாழை நார் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

இவை 6 கஜம், 9 கஜம் என இரு வகையாகவும், தனி முந்தி பிளைன், தனி முந்தி டிஸ்கோ பார்டர், மல்லமா பார்டர், பால் படிமம் கட்டம் என பல வகைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆர்டர்கள் கேட்போர் எந்த நிறத்தில் எந்த வகையில் கேட்டாலும் அதுபோல் தயாரித்துக் கொடுக்கிறோம். ஒரு நாளைக்கு ஒரு சேலை மட்டுமே நெய்ய முடியும். ஒரு சேலைக்கு 3,500 இலையோட்டம் தேவை, ஒரு சேலையை முழுவதுமாக தயாரிக்க பல நிலைகளில் 20 பேர் தேவை. இவை குறைந்தபட்சம் ரூ.800 முதல் அதிகபட்சமாக ரூ.1,500 வரை விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

இவை பட்டுப் புடவை போன்றே இருப்பதால் பலர் விரும்பி வாங்குகிறார்கள். அதோடு, இந்த சேலையை துவைக்காமல் பட்டுப் புடவையைப் போலவே ட்ரைவாஷ் மட்டுமே செய்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE