கிருஷ்ணகிரியில் நிலக்கடலை மகசூல் 80% பாதிப்பு: கடலை எண்ணெய் விலை உயர வாய்ப்பு

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: பருவமழை கைகொடுக்காததால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் நிலக் கடலை மகசூல் 80 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடலை எண்ணெய் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானாவாரியில் 14 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசா யிகள் நிலக்கடலையை சாகுபடி செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பருவமழையைப் பொறுத்து 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் மெட்ரிக் டன் வரை நிலக்கடலை மகசூல் கிடைக்கும்.

பொய்த்த மழை: நிகழாண்டில், மானாவாரி நிலங்களில் பூக்கள் பூத்து காய்கள் பிடிக்கும் தருவாயில் பருவ மழை பொய்த்தது. பல விவசாயிகள் அருகேயுள்ள விவசாயக் கிணறுகளிலிருந்து விலைக்குத் தண்ணீரை வாங்கி செடிகளை காப்பாற்றியபோதும், நீர் தேவை பூர்த்தியா காமல் 80 சதவீதம் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, நிலக்கடலை அறுவடை தொடங்கியுள்ள நிலையில், கிருஷ்ணகிரி சந்தைக்கு கடந்தாண்டை விட 20 சதவீதம் மட்டுமே நிலக்கடலை விற்பனைக்கு வந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

விலை உயர்வு: இது தொடர்பாக கிருஷ்ணகிரி பழையபேட்டையைச் சேர்ந்த வியாபாரி நாகராஜ் கூறியதாவது: ஆடி மாதம் இறுதியில் மழை இல்லாமல் வெயிலின் தாக்கத்தால் நிலக்கடலை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள குருவி நாயனப்பள்ளி, காளிக் கோயில் உள்ளிட்ட பகுதியிலிருந்து 25 சதவீதமும்,

கும்மானூர், தாளப்பள்ளி, தொகரப்பள்ளி, ஜிஞ்சப்பள்ளி, புலியரசி, வேப்பனப்பள்ளி பகுதிகளிலிருந்து 20 சதவீதமும் மட்டுமே நிலக்கடலை விற்பனைக்கு வருகிறது. நிகழாண்டில், வழக்கத்தைவிட நிலக் கடலைக்கு அதிக விலை கிடைத்தும், மகசூல் பாதிப்பால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பருவ நிலை மாற்றம்: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, கிருஷ்ணகிரி சந்தையிலிருந்து அறுவடை காலங்களில் 100 லாரிகளில் நிலக் கடலை, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு விற்பனைக்குச் செல்லும். நிகழாண்டில், 10 லாரிகள் கூட அனுப்பிவைக்க முடியவில்லை.

தற்போது, பச்சை நிலக்கடலை (60 கிலோ) ஒரு மூட்டை ரூ.2,500-க்கும், காய்ந்த நிலக் கடலை ஒரு மூட்டை ரூ.4,500-க்கும் மேல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கிறோம். நிலக் கடலை மகசூல் தொடர் பாதிப்புக்கு பருவ நிலை மாற்றங்கள் தான் முக்கிய காரணமாகும். தற்போது சுத்தமான கடலை எண்ணெய் லிட்டர் ரூ.300-க்கு விற்பனையாகும் நிலையில், வரும் நாட்களில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE