விலை வீழ்ச்சியால் அறுவடை செய்யாமல் அழுகும் தர்பூசணி: அரூர் விவசாயிகள் கவலை

By எஸ்.செந்தில்

அரூர்: மழைக்காலம் மற்றும் விலை வீழ்ச்சி காரணமாக அரூர் பகுதியில் தர்பூசணி பழங்கள் நிலத்திலேயே அழுகும் நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் புது கொக்கராப்பட்டி, வாச்சாத்தி, தாதம்பட்டி, புதுப்பட்டி, இருளப்பட்டி, முத்தனூர், கம்பைநல்லூர், மொரப்பூர் உள்ளிட்ட கிராமங்களில் அதிக அளவில் தர்பூசணி ( பச்சை மற்றும் கிரண் ரகம் ) பயிரிடப்படுகிறது. வழக்கமாக கோடை சீசனுக்காக 350-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. சில விவசாயிகள் ஆண்டு முழுவதும் பயிரிடுகின்றனர்.

இங்கிருந்து சேலம், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும், உள்ளூர் தேவைகளுக்காகவும் அனுப்பப்பட்டு வருகிறது. கோடைகாலத்தில் தேவை அதிகம் என்பதால் ஒரு கிலோ தர்பூசணி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையாகிறது. ஆனால் போதிய சீசன் இல்லாத மழைக்காலங்களில் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து விடுகிறது. கடந்த வாரம் வரை கிரண் ரக தர்பூசணி கிலோ ரூ.10-க்கு விற்ற நிலையில், தொடர் மழை காரணமாக தற்போது கிலோ ரூ.3-க்கு விற்பனையாகிறது.

இது குறித்து கொக்கராப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தர்பூசணி விவசாயி குணசேகரன் கூறியதாவது: தர்பூசணி சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. தர்பூசணி பழங்களை பெரும்பாலும் இடைத்தரகர்கள் மூலமே விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் குறைந்த விலை பேசி வாங்கும் அவர்கள் மொத்த வியாபாரிகளிடம் அதிக விலைக்கு விற்று விடுகின்றனர்.

கடந்த கோடையின் போது விவசாயிகளிடம் கிலோ ரூ.10-க்கு வாங்கிய இடைத்தரகர்கள் பின்னர் கிலோ ரூ.18 வரை விற்றனர். தற்போது தொடர் மழை காரணமாக விற்பனை குறைந்து விட்டதாக கூறி மிகக் குறைந்த விலையாக கிலோ ரூ.3-க்கு கேட்கின்றனர். பெரிய அளவிலான பழங்களை பெரிய நகரங்களில் உள்ள பழமுதிர்ச்சோலை மற்றும் மால்களில் கிலோ ரூ.25 வரை விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரில் 10 டன் பழங்கள் கிடைக்கும் நிலையில் 2 முதல் 3 டன் வரை மட்டுமே விற்பனைக்கு செல்கிறது.

மற்ற பழங்கள் அனைத்தும் விலை போகாமல் நிலத்திலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மஞ்சள், பருத்திக்கு வேளாண்மை விற்பனை மையங்கள் மூலம் விற்கப்படுவது போல், தர்பூசணி, வெள்ளரி, சாம்பல் பூசணி போன்றவற்றையும் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE