வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.209 உயர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு நடத்தும் ஆயில் மார்கெட்டிங்க் நிறுவனங்கள் (ஓஎம்சி) 19 கிலோ எடைகொண்ட வணிகப்பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலையை இன்று (அக்.1)ம் தேதி முதல் ரூ.209 உயர்த்தியிருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி சிலிண்டரின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படுகின்றன. புதிய திருத்தப்பட்ட விலையின் படி சென்னையில் வணிகப்பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,898-க்கு விற்பனையாகிறது. கடந்த மாதத்தில் (செப்டம்பர்) இது ரூ.1,685-க்கு விற்பனையானது. டெல்லியில் புதிய விலைபடி, ரூ.1,731.50க்கு விற்பனையாகிறது. முந்தயை விலை ரூ.1522.50. கொல்கத்தாவில் ரூ.1,839.50க்கும் (முந்தைய விலை ரூ.1,636) மும்பையில் ரூ.1,684-க்கும் முந்தைய விலை (ரூ.1,482) விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையுர்வு குறித்து ஹோட்டல் நடத்தும் ஒருவர், இந்த விலையேற்றத்தின் சுமையெல்லாம் இறுதியில் வாடிக்கையாளர்கள் மீதே திணிக்கப்படுகின்றன என்றார்.

இதனிடையே ஆட்டோ எல்பிஜி கேஸின் விலையும் ஞாயிற்றுக்கிழமை (அக்.1) முதல் உயர்வடைந்துள்ளது. அதன்படி புதிய விலையாக ஒரு கிலோ ரூ.53.64 க்கு விற்பனையாகிறது. முந்தைய விலை ரூ.47.53 க்கு விற்பனையானது. கிலோவுக்கு ரூ.6.11 உயர்வடைந்துள்ளது. இந்த விலையேற்றம் குறித்து, "அத்தியாவசிய பொருள்களின் விலையுயர்வுக்கு மத்தியில், இந்த கேஸ் விலையேற்றம் தேவையற்றது. எங்களால் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. ஏற்கனவே டீசல் மற்றும் பொட்ரோல் விலை அதிகரித்துள்ள நிலையில் கேஸ் அதற்கு சிறந்த மாற்றாக இருந்து. ஆனால் தொடர்ந்து விலை ஏறிச்சென்றால் எங்களால் தொழில் செய்யமுடியாது" என்று ஆட்டோ ஒட்டுநர் செல்வின் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE