செப்.30, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு - தொடர் சரிவின் பின்னணி என்ன?

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 30) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.42,880-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (சனிக்கிழமை) கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,360-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.42,880-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.46,640-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை ரூ.1.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.76,000 ஆக இருக்கிறது.

தொடர் சரிவின் பின்னணி என்ன?தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துவந்த நிலையில், கடந்த சில நாட்களாக விலை குறைந்து வருகிறது. இதுகுறித்து சந்தை நிபுணர்கள் கூறுகையில், "உலகளவில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது. அமெரிக்கப் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து மீளத் தொடங்கியுள்ள நிலையில், அந்நாட்டு டாலரின் மதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் தங்கத்துக்கு பதில் டாலரில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனிடையே 44 - 43 ஆயிரம் வரை இருந்து வந்த தங்கம் ரூ.42,880 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் நாட்களில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தால் அது தங்கத்தின் விலையிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE