இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.52 லட்சம் கோடி: ரிசர்வ் வங்கி தகவல்

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியாவின் வெளிநாட்டு கடன் கடந்த ஜூன் மாத இறுதி நிலவரப்படி ரூ.52 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தப் புள்ளிவிவரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 2023 மார்ச் மாத இறுதியில் இந்தியாவின் வெளிநாட்டு கடன் 62,430 கோடி டாலராக (ரூ.51.81 லட்சம் கோடி) இருந்தது. இந்த நிலையில் மூன்று மாதங்களில் 470 கோடி டாலர் (ரூ.39,000 கோடி) அதிகரித்து ஜூன் இறுதியில் 62,910 கோடி டாலரைத் தொட்டுள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.52.21 லட்சம் கோடியாகும்.

இந்தியாவின் வெளிநாட்டு கடன் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் மார்ச் இறுதியில் 18.8 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில் அது ஜூன் இறுதியில் 18.6 சதவீதமாக குறைந்துள்ளது.

நடப்பாண்டு ஜூன் இறுதி மதிப்பீட்டின்படி, அமெரிக்க டாலரில் வெளிநாடுகளுக்கு இந்தியா செலுத்த வேண்டிய கடன் என்பது 54.4 சதவீதம் என்ற அளவில் பெரும்பங்கை கொண்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, இந்திய ரூபாய் (30.4 சதவீதம்), எஸ்டிஆர் (5.9 சதவீதம்), யென் (5.7 சதவீதம்), யூரோ (3.0 சதவீதம்) ஆகிய கரன்சிகள் உள்ளன.

கடந்த ஜூன் மாத கணக்கீட்டின்படி இந்தியா செலுத்த வேண்டிய மொத்த வெளிநாட்டு கடனில் நீண்ட கால கடன் 50,550 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது. இது முந்தைய மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும்போது 960 கோடி டாலர் அதிகமாகும். அதேசமயம், ஒட்டுமொத்த கடனில் குறுகிய கால கடன்களின் பங்களிப்பு முந்தைய மார்ச் மாத அளவான 20.6 சதவீதத்திலிருந்து ஜூனில் 19.6 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE