ஆகாஷ், இஷா, ஆனந்த் அம்பானிக்கு ஊதியம் கிடையாது: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

By செய்திப்பிரிவு

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 46-வது வருடாந்திரக் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது அதன் இயக்குநர் குழுவில் முகேஷ் அம்பானியின் வாரிசுகளான ஆகாஷ், இஷா, ஆனந்த் அம்பானி ஆகியோர் செயல்சாரா இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இம்மூவருக்கும் மாத ஊதியம் வழங்கப்படாது என்றும் இயக்குநர் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்கான கட்டணமும், நிறுவனத்தின் லாபத்தின் அடிப்படையில் கமிஷனும் வழங்கப்படும் என்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 2020-21 நிதி ஆண்டு முதல் அவரது பணிக்காக நிறுவனத்திலிருந்து ஊதியம் எதுவும் பெறுவதில்லை. இந்நிலையில், அவரது வாரிசுகளுக்கும் ஊதியம் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இயக்குநர் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான கட்டணம் மற்றும் நிறுவனத்தின் லாபத்தில் கமிஷன் ஆகியவை மட்டும் வழங்கப்பட உள்ளது.

2014-ம் ஆண்டு முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநர் குழுவில் இணைக்கப்பட்டார். கடந்த மாதம் அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். இதையடுத்து அவரது வாரிசுகள் மூவருக்கும் இயக்குநர் குழுவில் பொறுப்பு வழங்கப்பட்டது.

ரூ.2.6 லட்சம்: 2022-23 நிதி ஆண்டில், நீதா அம்பானிக்கு இயக்குநர்குழு கூட்டத்தில் கலந்துகொண்டதற்கான கட்டணமாக ரூ.6 லட்சமும், நிறுவனத்தின் லாபத்தின் அடிப்படையில் ரூ.2 கோடியும் வழங்கப்பட்டது. இதுபோலவே அவரது வாரிசுகள் மூவருக்கும் வழங்கப்பட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE