வாகன காப்பீடு ஏன் அவசியம்? - பாதிப்புக்குப் பிறகு வருந்தி பயனில்லை!

By க.சக்திவேல்

கோவை: மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தை தொடர்ந்து வாகன எண்ணிக்கையில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி தமிழகத்தில் 3.38 கோடி வாகனங்கள் உள்ளன. இதில், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2.85 கோடியாக உள்ளது. மொத்த வாகன எண்ணிக்கையில் இது 84.34 சதவீதம் ஆகும். தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை சராசரியாக 8 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. ஆனால், வாகனக் காப்பீட்டின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை.

பலர் காப்பீடு செய்த பிறகு அதை புதுப்பிப்பதில்லை. ஏதேனும் பாதிப்பு ஏற்பட்ட பிறகே வருந்துகின்றனர். இந்தச்சூழலில் காப்பீட்டின் வகைகள், அதன் அவசியம் குறித்து நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் எம்.ரவி கூறியதாவது: வாகனங்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களில் முழுக் காப்பீடு (காம்ப்ரஹன்சிவ்), 3-வது நபர் காப்பீடு என இரண்டு வகைகள் உள்ளன.

பொது இடத்தில் வாகனத்தைப் பயன்படுத்துவதால் மூன்றாவது நபரின் உயிருக்கு அல்லது சொத்துக்கு ஏற்படும் சேதத்துக்கு வாகன உரிமையாளரே பொறுப்பாவார். எனவே, மூன்றாவது நபர் காப்பீடு என்பது அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம் ஆகும்.

3-வது நபர் காப்பீட்டின் மூலம், வாகனம் மோதி யாருக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ, அவருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும். காப்பீடு எடுத்தவருக்கு இழப்பீடு கிடைக்காது. முழுக்காப்பீடு செய்வது என்பது வாகன உரிமையாளரின் விருப்பத்துக்கு உட்பட்டது. முழுக் காப்பீடு செய்திருந்தால் மட்டுமே சாலை விபத்து, தீ விபத்து, புயல், வெள்ளம், நிலநடுக்கம், திருட்டு ஆகியவற்றின்போது வாகன உரிமையாளர் இழப்பீடு கோர முடியும். அனைத்து வகையான காப்பீட்டின் வகைகள் குறித்தும் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ) இணையதளமான www.policyholder.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்.

இழப்பீடு பெறுவது எப்படி? - பாதிக்கப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் முதலில் வாகனம் எவ்வாறு சேதமடைந்தது என்பது குறித்து பாலிசி எண்ணைக் குறிப்பிட்டு, செல்போன் அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ, நேரிலோ, காப்பீட்டு நிறுவனத்தை தொடர்புகொண்டு தெரியப்படுத்த வேண்டும். பின்னர், வாகனத்தை அருகில் உள்ள பழுதுபார்க்கும் நிலையத்துக்கு கொண்டுசென்று தோராய சேத மதிப்பைப் பெற வேண்டும்.

பின்னர், தொடர்புடைய காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் வாகனம் இருக்கும் இடத்துக்கு வந்து சேதங்கள் குறித்து ஆய்வு செய்வார். ஒருவேளை, வாகனத்தை வேறு இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சூழலில், அதற்கான கட்டணத்தையும் (அதிகபட்சம் ரூ.1,500) காப்பீட்டு நிறுவனம் வழங்கும்.

பின்னர், மதிப்பீட்டாளர் சேத அறிக்கை வழங்கியதும், வாகனம் தயாரிக்கப்பட்ட ஆண்டு, வகையைப் பொருத்து தேய்மானச் செலவு போக இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இதில், வாகனத்தின் பிளாஸ்டிக் பாகங்களுக்கு 50 சதவீத இழப்பீடு மட்டுமே கிடைக்கும். உடைந்துபோன கண்ணாடிகளுக்கு முழு இழப்பீடு கிடைக்கும். உலோக பாகங்களுக்கு ஆண்டைப் பொருத்து இழப்பீடு வழங்கப்படும். வாகனத்தின் பாகங்களைப் பொருத்துதல், கழற்றுதல் உள்ளிட்டவற்கான கட்டணம் (லேபர் சார்ஜ்) முழுவதுமாக வழங்கப்படும்.

புகைப்படங்கள் அவசியம்: வாகனம் பாதிப்புக்குள்ளாகும்போது எந்த நிலைமையில் உள்ளதோ, அந்த நிலைமையில் புகைப்படம் எடுத்து வைத்திருப்பது நல்லது. இழப்பீடு கோரும்போது, வாகனம் எப்படி சேதமடைந்தது என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரத்துக்காக அந்தப் புகைப்படங்கள் தேவைப்படும்.
மேலும், காப்பீட்டு நிறுவனத்திடம் வாகனத்தின் சேதம் குறித்து தகவல் தெரிவிக்க தாமதப்படுத்தக் கூடாது.

அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் தகவல் தெரிவிப்பது நல்லது. வெளியூரில் இருந்தாலும், தொலைபேசி மூலமாவது சேதம் குறித்து தெரிவிக்க வேண்டும். மேலும், காப்பீட்டு நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்காமல் சுயமாக செலவு செய்து வாகனத்தை பழுதுபார்க்ககூடாது. அப்படிச்செய்தால், பின்னர் இழப்பீடு கோர முடியாது. காப்பீடு பெற முறையான ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

17 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

23 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

மேலும்