ரூ.40,000 கோடி ஜிஎஸ்டி முறைகேடு நோட்டீஸுக்கு எதிராக ட்ரீம் 11 நிறுவனம் ரிட் மனு தாக்கல்!

By ஆர்.முத்துக்குமார்

புதுடெல்லி: 2027-ம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சரான ட்ரீம் 11 நிறுவனம் ரூ.40,000 கோடி ஜிஎஸ்டி முறைகேடு செய்ததாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ட்ரீம் 11 நிறுவனத்தின் மூலதார நிறுவனமான ட்ரீம் ஸ்போர்ட்ஸ், மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த நோட்டீஸை எதிர்த்து முறையீடு செய்துள்ளது.

வணிகச் செய்திகளை வெளியிட்டு வரும் செய்தி நிறுவனம் ஒன்று இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி ஹர்ஷ் ஜெயின் என்பவரைத் தலைவராகக் கொண்ட ட்ரீம் 11 நிறுவனம், பந்தயங்களின், அதாவது பெட்களின் பெயரளவு மதிப்பில் 28 சதவீத ஜிஎஸ்டியை செலுத்தத் தவறியது. இது ஏன் என்று விளக்கம் கேட்டு வரி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த வரி ஏய்ப்பு உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் இந்தியாவின் மறைமுக வரி வரலாற்றில் இரண்டாவது பெரிய முறைகேடு இது என்று சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கேம்ஸ்கிராஃப்ட் நிறுவனம் ரூ.21,000 கோடி ஜிஎஸ்டி முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நிறுவனமும் அதை எதிர்த்து முறையீடு செய்துள்ளது.

இந்தியாவில் ஃபேன்டஸி கேமிங் துறையில் ட்ரீம் 11, அதன் மதிப்பீடு மற்றும் பயனர்களின் எண்ணிக்கை ஆகிய இரண்டிலும் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிறுவனத்துக்கான விளம்பரத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் நடித்துள்ளனர். ஆன்லைன் ஊடகங்கள் பெரிய அளவில் ட்ரீம் 11 ஃபேன்டஸி கேமிங் விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தன.

ட்ரீம் 11 நிறுவனத்தின் சமீபத்திய மதிப்பீடு 8 பில்லியன் டாலர்களைக் கடந்துள்ளது. தனது ஸ்போர்ட்ஸ் ஃபேன்டஸி தளத்தில் 180 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளதாக இந்நிறுவனம் கோரியுள்ளது. மார்ச் 31, 2022 அன்று முடிவடைந்த நிதியாண்டில், ட்ரீம் 11 தனது செயல்பாட்டு வருவாயான ரூ.3,840.7 கோடிகளிலிருந்து உருவான நிகர லாபம் ரூ. 142 கோடி என வெளியிட்டது.

இந்நிலையில், ஜிஎஸ்டி இண்டெலிஜென்ஸ் தலைமை இயக்குனரகம் ட்ரீம் 11 நிறுவனம் ரூ.40,000 கோடி ஜிஎஸ்டி முறைகேடு செய்துள்ளதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது, இதை எதிர்த்துதான் இந்த நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. கேம்ஸ்கிராஃப்ட், ட்ரீம் 11 நிறுவனங்கள் தொடர்பான இந்த நோட்டீஸ், இதன் மீதான வழக்கு இவை போன்று செயல்படும் பிற 40 கேமிங் நிறுவனங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜிஎஸ்டி கவுன்சில் உண்மையான பணத்தைக் கொண்டு ஆடப்படும் கேமிங் பரிவர்த்தனைகளுக்கு 28% ஜிஎஸ்டி விகிதத்தை விதிக்க முடிவு செய்தது, இது தொழில்துறையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE