ஒரு வாரத்தில் சவரனுக்கு ரூ.560 வரை குறைவு - ‘தங்கம் விலை சரிவு தற்காலிகமானதுதான்’

By இல.ராஜகோபால்

கோவை: தங்கத்தின் விலை குறைவது தற்காலிகமானதுதான், மீண்டும் உயரும் என கோவை நகை தயாரிப்பு தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக விலை குறைய தொடங்கியது. கோவையில் செப்டம்பர் 20-ம் தேதி 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.5,530-க்கும் சவரன் ரூ.44,240-க்கும் (3 சதவீத ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.45,567) விற்பனையானது. கடந்த 7 நாட்களாக தங்கம் இறங்குமுகத்தில் உள்ளது.

நேற்று முன்தினம் கிராம் ரூ.5,485-க்கும், சவரன் ரூ.43,880-க்கும் விற்பனையானது. இந்நிலையில், நேற்று மேலும் குறைந்து கிராம் ரூ.5,460-க்கும், சவரன் ரூ.43,680-க்கும் (ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.44,990) விற்பனையானது. ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.560 வரை குறைந்துள்ளது.

இது குறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறியதாவது: உலகளவில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது. அமெரிக்க பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து மீள தொடங்கியுள்ள நிலையில், அந்நாட்டு டாலரின் மதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் தங்கத்துக்கு பதில் டாலரில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தியாவில் ஏற்றுமதி கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளதால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. இது நல்லதல்ல. தற்போதைய சந்தை சூழலில் இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாக இருந்திருந்தால் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.2,000 வரை குறைந்திருக்க வேண்டும்.

புரட்டாசி மாதத்தில் வியாபாரம் மிகவும் மந்தமாக இருக்கும். கோவை சந்தையில் வழக்கமாக தினமும் 200 கிலோ எடையிலான தங்க வணிகம் நடைபெறும். தற்போது 80 கிலோ வரை மட்டுமே வணிகம் நடைபெறுகிறது. தினசரி வணிகம் 50 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. தங்கத்தின் விலை குறைந்துள்ளது தற்காலிகமானது தான். விரைவில் மீண்டும் உயரும்.

எதிர் வரும் நாட்களில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தால் அது தங்கத்தின் விலையிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE