‘மின் கட்டணம் தொடர்பாக நல்ல முடிவு வரும்’ - தொழில் துறையினர் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

கோவை: மின் கட்டணம் தொடர்பாக அரசிடம் இருந்து நல்ல முடிவு வரும் என எதிர்பார்ப்பதாக, தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

நிலைக்கட்டணம் குறைப்பு, ‘எம்எஸ்எம்இ’ தொழில்துறையினருக்கு உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை நீக்குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் உள்ள தொழில் அமைப்புகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு, அரசு சார்பில் நேற்று முன்தினம் சென்னையில் அமைச்சர்கள் தலைமையில் நடந்த கூட்டம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தொழில்துறையினர் கூறுகின்றனர்.

தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், ஜெயபால் ஆகியோர் கூறியதாவது: மின் கட்டணம் உயர்த்துவது குறித்து நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் தொடங்கி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். கடந்த ஓராண்டாக பல முறை கோரிக்கைகள் விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் குறு, சிறு மற்றும் நடுத்தர பிரிவை சேர்ந்த பல ஓபன் எண்ட் நூற்பாலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

எங்களை எல்லாம் நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை காக்க ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்து இக்கூட்டமைப்பை உருவாக்கினோம். இதில் தமிழகம் முழுவதும் சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தொழில்அமைப்புகள் இணைந்துள்ளன.

நேற்று முன்தினம் சென்னையில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் பிரச்சினைகள் குறித்து தெளிவாக பேசினோம். அமைச்சர்கள் இருவரும் அவற்றை புரிந்து கொண்டு உரிய நடவடிக்கை சில நாட்களில் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு தொழில்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் விக்னேஷ் (சீமா), சிவக்குமார் (காட்மா) ஆகியோர் கூறும்போது, “குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் மின் கட்டண உயர்வால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் ஒன்றுபட்டு அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் நடவடிக்கை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் 165 தொழில் அமைப்பினர் ஒன்றிணைந்து செயல்பட தொடங்கினோம்.

அதற்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. சென்னையில் அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த கூட்டம் நேர்மறையாக இருந்தது. எங்கள் கோரிக்கைகளின் தன்மையை புரிந்து கொண்டு முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர். நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE