உத்தராகண்ட் மாநில அரசுடன் லண்டனின் போமா குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

சென்னை: லண்டனைச் சேர்ந்த போமா குழுமம் உத்தராகண்ட் மாநிலத்தில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்கவுள்ளது. இதற்காக உத்தராகண்ட் மாநில முதல்வர் தாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மாநில தொழில் துறை செயலாளர் வினய் சங்கர் பாண்டே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், ``இயற்கை சுற்றுச்சூழல் நிறைந்தமாநிலமான உத்தராகண்ட் இயற்கை விரும்பிகளுக்கு ஏற்ற சுற்றுலாத் தலமாக இருக்கும். எனவே இயற்கை சுற்றுலாவில் முதலீடு செய்வதற்கு அபரிமிதமான வாய்ப்புகள் உள்ளன.

போமா குழுமம் ரோப்வே எனப்படும் கம்பி வழி போக்குவரத்தில் உலகளவில் முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம் சமோலி மாவட்டத்தில் அவுளி ரோப்வேயை ஏற்கெனவே அமைத்துள்ளது. மேலும் டேராடூன் - முசோரி ரோப்வே மற்றும் யமுனோத்ரி ரோப்வே திட்டங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது. எனவே ஹரித்வார் உள்ளிட்ட எண்ணற்ற புனித சுற்றுலாத் தலங்களைக் கொண்ட இங்கு ரோப்வேஅமைப்பதற்கான தொழில்நுட்ப வசதிகளை வழங்கும் வகையில் சிறப்பு மையத்தை அமைக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சுற்றுலாவுடன் சூழலியல் மற்றும் பொருளாதாரத்திலும் மாநில அரசு கவனம் செலுத்தஉள்ளது. வளர்ச்சிக்கும் ரோப்வே போன்ற விருப்பங்கள் மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். அதேசமயம் உள்ளூர் மக்களின்வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிப்பதோடு சுற்றுச்சூழலின் பார்வையில் இது சிறந்த தேர்வாக இருக்கும்'' என்றார்.

முன்னதாக டேராடூனில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டுக்கான லண்டன் ரோட்ஷோவில் முதல்வர் தாமி பங்கேற்றார். அங்கு முன்னணி தொழில் நிறுவனங்களை முதல்வர் சந்தித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE