கோவையில் தொழில் நிறுவனங்கள் மூடலால் மின்வாரியத்துக்கு ஒரே நாளில் ரூ.100 கோடி இழப்பு

By செய்திப்பிரிவு

கோவை / திருப்பூர்: மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி நேற்று நடைபெற்ற உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இதனால் மின்வாரியத்துக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டதாக தொழில்துறையினர் தெரிவித்தனர். திருப்பூரில் ரூ.150 கோடி மதிப்பில் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

நிலை கட்டணத்தை குறைத்தல், உச்ச பயன்பாட்டு நேர மின்கட்டணத்தை நீக்குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சிறு, குறு, நடுத்தர (எம்.எஸ்.எம்.இ) தொழில்துறையினர் நேற்று ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில் கணபதி, இடையர்பாளையம், சிட்கோ உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் அதிகம் செயல்படும் பகுதிகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.

இது குறித்து, தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், ஜெயபால் ஆகியோர் கூறும் போது, “கோவை மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டன. ரூ.1,000 கோடிக்கு மேல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒரு நாள் வேலையை இழந்தனர். மின்வாரியத்துக்கு இன்று மட்டும் கோவை மாவட்டத்தில் ரூ.100 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

தமிழ்நாடு தொழில் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்கள் திருஞானம் (கொடிசியா), சிவக்குமார் (காட்மா), கல்யாணசுந்தரம், சிவக்குமார் (லகு உத்யோக் பாரதி), விக்னேஷ் (சீமா) ஆகியோர் தலைமையில் தொழில்துறையினர் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியை சந்தித்து மனு அளித்தனர். தொடர்ந்து மின்வாரிய தலைமை பொறியாளர் வினோதனை டாடாபாத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு சமர்ப்பித்தனர்.

பின்னர், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மின் கட்டண உயர்வு தமிழகத்தில் உள்ள அனைத்து ‘எம்எஸ்எம்இ’ தொழில் நிறுவனங்களையும் மிக கடுமையாக பாதித்துள்ளது. எங்கள் கூட்டமைப்பில் தமிழகம் முழுவதும் உள்ள 165 தொழில் அமைப்பின் நிர்வாகிகள் இணைந்துள்ளனர். அரசிடம் முன்வைக்கப்பட்ட 7 அம்ச கோரிக்கைகள் ஓராண்டு கடந்தும் நிறைவேற்றப்படவில்லை. மிக குறைந்த முதலீட்டில் அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதை கருத்தில்கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

திருப்பூர்: தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோபி பழனியப்பன் கூறியதாவது: திருப்பூரை பொறுத்தவரை மூலப் பொருட்கள் விலை ஏற்றம் காரணமாக, தொழில் நலிவடைந்து வந்த நிலையில் மின்வாரியத்தின் நிலை கட்டணம் மற்றும் உச்ச பயன்பாட்டு நேர கட்டணம் காரணமாக தொழிலை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதில் சிட்கோ, பல்லடம் பகுதி விசைத்தறிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு ஆதரவு தந்துள்ளன. வரும் அக்டோபர் 9-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து, அந்தந்த மாவட்டம் வாரியாக மனு அளிக்க உள்ளோம். அக்.16-ம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், இதில் பல்லாயிரக்கணக்கான தொழில் துறையினர் பங்கேற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தால், திருப்பூரில் நேற்று ரூ.150 கோடிக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE