5 லட்சம் விழாக்கால வேலைவாய்ப்புகளை உருவாக்க மீஷோ திட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆன்லைன் வர்த்தக நிறுவனமான மீஷோ பண்டிகை காலத்தை முன்னிட்டு 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. விற்பனையாளர்கள் - லாஜிஸ்டிக்ஸ் (பொருட்கள் கையாளுநர்கள்) பின்னலில் இந்த வேலைவாய்ப்பை உருவாக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

விழாக்காலங்களில் தேவை அதிகரிக்கும் என்பதால் இந்த புதிய விழாக்கால வேலைவாய்ப்புகள் பலனளிக்கும் என்றும் மீஷோ தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டும் மீஷோ இதேபோல் விழாக்கால வேலைவாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கு 50 சதவீதம் அதிகம் எனத் தெரிகிறது. இ காமர்ஸ் தொழில் தளத்தில் இது கவனம் பெற்றுள்ளது.

அதன்படி பொருட்களைக் கொண்டு சேர்க்கும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களான இகாம் எக்ஸ்பிரஸ், டிடிடிசி, எலாஸ்டிக் ரன், லோட்ஷேர், டெல்லிவெரி, ஷேடோஃபாக்ஸ், எஸ்க்பிரஸ்பீஸ் ஆகிய நிறுவனங்களில் 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த வேலைவாய்ப்புகளில் 60 சதவீதம் 3 டயர், 4 டயர் என வரையறக்குப்பட்டுள்ள நகரங்களில் ஏற்படுத்தப்படும். பொருட்கள் டெலிவரிக்கு எடுத்தல், பிரித்தல், லோட் செய்தல், அன்லோட் செய்தல் மற்றும் திருப்பியளிக்கப்பட்ட பொருட்களை (ரிட்டர்ன்களை) ஆய்வு செய்தல் பணிகளுக்கு ஆட்கள் அமர்த்தப்படுவர் என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மீஷோ நிறுவனத்தின் தலைமை அதிகாரி சவுரப் பாண்டே கூறுகையில், "இந்த விழாக்காலத்தில் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகளவிலான ஆர்டர்கள் வரும் என்று கணித்துள்ளோம். அதனைக் கருத்தில் கொண்டே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறோம். வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் பொருட்களை சேர்த்து அவர்களின் அபிமானத்தைப் பெற இந்த முயற்சி உதவும். மேலும் இதன்மூலம் எண்ணிலடங்காத சிறு வணிகர்களுக்கு வியாபார அதிகாரம் உருவாக்கப்படும்" என்றார்.

இதுதவிர விழாக்காலப் பணியாளர்கள் என்ற பெயரில் 3 லட்சம் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். உற்பத்தி, பேக்கேஜிங், பொருட்களை தரம் பிரித்தல் எனப் பல்வேறு படிநிலைகளில் இந்தப் பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுவார்கள் என்று மீஷோ தெரிவித்துள்ளது.

இந்த விழாக்காலத்தில் ஃபேஷன், அணிகலன்கள், விழாக்கால அலங்காரப் பொருட்கள் என மீஷோ விற்பனையாளர்கள் 80 சதவீதம் புதிய பொருட்களை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த விழாக்காலத்தில் டயர் 3 நகரங்களில் விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்ப்பதாக ஷேடோஃபேக்ஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான அபிஷேக் பன்சால் தெரிவித்துள்ளார். மேலும், லக்னோ, சூரத், லூதியானா, சாகர் போன்ற மிகப்பெரிய பிக் அப் மையங்கள்ல் ஷேடோஃபேக்ஸ் அதிகமாக முதலீடு செய்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மீஷோ இந்தியாவின் 3PL எனப்படும் மூன்றாம் தரப்பு லாஜிஸ்டிக்ஸில் பெரிய பங்காற்றுகிறது. 2023 நிதியாண்டில் 1.2 பில்லியனுக்கு அதிகமாக மூன்றாம் தரப்பு லாஜிஸ்டிக்ஸ் வர்த்தகத்தை மேம்படுத்த மீஷோ இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE