விற்பனையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க கூடுதல் கவனம்: அமேசான் பிஸினஸ் இயக்குநர் சுசித் சுபாஷ் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு விற்பனையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்தவுள்ளோம் என்று அமேசான் பிஸினஸ் இயக்குநர் சுசித் சுபாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 14,000 விற்பனையாளர்களுடன் கடந்த 2017-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அமேசான் வணிகம் தற்போது 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்களுடன் இணைந்து 19 கோடிக்கும் மேற்பட்ட தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் விஸ்வரூப வளர்ச்சியை கண்டுள்ளது. மடிக்கணினிகள், எலக்ட்ரானிக்ஸ் முதல் தொழில் மற்றும் பழுதுபார்க்கும் துறைக்கு தேவையான பொருட்கள் வரை அனைத்தும் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அமேசான் நிறுவனத்தைப் பொறுத்தவரை அது வாடிக்கையாளரை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. அந்த அணுகுமுறையே கடந்த ஆறு ஆண்டு கால அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகியுள்ளது.

மெய்நிகர் கடன்கள்: வாடிக்கையாளர் எண்ணிக்கை யில் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (சிஏஜிஆர்) 150 சதவீதமாகும். அதேபோன்று, விற்பனையிலும் நிறுவனம் 145 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

இந்த வளர்சியில், இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்கள் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளன.

ஆறாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், தகுதியான வாடிக்கையாளர்களுக்கு மெய்நிகர் கடன்களை வழங்க ஏதுவாக அமேசான் பே லேட்டரை ஒருங்கிணைத்துள்ளோம். இதன் மூலம், இந்தியா முழுவதும் உள்ள எங்களின் வணிக வாடிக்கையாளர்களிடையே டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்கவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) கடன் கிடைப்பதை உறுதி செய்யவும் முடியும்.

வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப, அமேசான் பிசினஸ் தொடர்ந்து புதுமைகளை புகுத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாகவே ‘‘பில் டு ஷிப் டு’’ போன்ற அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா முழுமைக்குமான ஏற்றுமதியில் ஜிஎஸ்டி கிரெடிட் கோர இது அனுமதிக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொள்முதலை மேலும் ஒழுங்குபடுத்த ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-க்கு உகந்த மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது. பொருட்கள் விநியோகத்துக்கான காலம் தற்போது ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை என்று உள்ளது. அதை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

அனைத்து அமேசான் பிசினஸ் வாடிக்கையாளர்களுக்கும் உடனடிவிநியோகம் என்பது ஒரு முக்கியமான அம்சமாக உள்ளது. இந்தஆண்டு விற்பனையில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பிரைம் வாடிக்கையாளர்களின் பங்களிப்பு அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது. இவ்வாறு சுசித் சுபாஷ் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE