கத்தரிக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை: கிலோ ரூ.15-க்கு விற்பதால் இழப்பு

By எஸ்.செந்தில்

அரூர்: கத்தரிக்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.15-க்கு விற்பதால் அரூர் பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக வரட்டாறு அணையின் கீழ்பகுதியில் உள்ள கீரைப்பட்டி, தாதராவலசை, வாழைத்தோட்டம், வள்ளி மதுரை உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களில் நீர் வளம் உள்ளதால் தக்காளி, கத்தரி, வாழை, குடைமிளகாய், பாக்கு உள்ளிட்டவற்றை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.

தற்போது இப்பகுதியில் துருவா ரக கத்தரிக்காய் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளைவிக்கப்படும் கத்தரிக்காய்க்கு சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் இங்கு அறுவடை செய்யப்படும் கத்தரிக்காய் அனைத்தும் தினமும் 30 டன் வரை சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமீப காலமாக வெளி மாநிலங்களில் இருந்து அதிகஅளவு கத்தரிக்காய் விற்பனைக்கு வருவதால் அதன் விலை சரிந்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்ற கத்தரிக்காய் தற்போது ரூ.15-க்கு விற்கப்படுகிறது. இதனால் அறுவடை கூலி கூட கிடைப்பதில்லை என கத்தரி விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இதுகுறித்து கத்தரிக்காய் விவசாயி ராஜேந்திரன் கூறியதாவது:

ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சம் வரை செலவு செய்து துருவா ரக கத்தரிக்காய் பயிரிட்டுள்ளோம். நாற்று நட்டு 45 நாட்கள் முதல் சுமார் ஐந்து மாதம் வரை காய்கள் கிடைக்கும். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.35 வரை விற்பனையானது. ஆனால் தற்போது கிலோ ரூ.15-க்கு விற்பனையாகிறது.

காய் அறுவடை கூலி, மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல வாகன வாடகை உள்ளிட்டவற்றுக்கு கூட விலை கிடைப்பதில்லை. குறைந்தது 20 ரூபாய்க்கு மேல் விற்றால் தான் கட்டுப்படியாகும். விலை சரிவால் சென்னைக்கு கத்தரிக்காய் ஏற்றுமதி செய்வதில் இப்பகுதி விவசாயிகள் தயக்கம் அடைந்து உள்ளூர் பகுதியில் விற்கத் தொடங்கியுள்ளனர், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE