தீபாவளி நேரத்தில் தடை, கட்டுப்பாடுகளால் சிவகாசியில் பட்டாசு தொழில் முடங்கும் அபாயம்

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு உற்பத்திக்கு அனுமதி கோரிய பட்டாசு உற்பத்தியாளர்களின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி உள்ளது. இதனால் சிவகாசியில் பட்டாசுத் தொழில் பாதிக்கப்படும் என உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர்.

பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பில் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு இந்தியா முழுவதிலும் தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டது. மேலும் அதில் தீபாவளி அன்று 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும், பகலில் பட்டாசு வெடிக்க கூடாது, பேரியம் நைட்ரேட் பயன்படுத்த கூடாது, சரவெடி உற்பத்தி செய்ய கூடாது, ஆன்லைனில் பட்டாசு விற்க கூடாது, குறைந்த மாசு உள்ள பசுமை பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்தது.

இந்த உத்தரவால் பட்டாசு ஆலைகளில் அனைத்து வகை பட்டாசுகளும் உற்பத்தி செய்ய முடியாததால் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை சரிவடைந்து உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆலைகளை மூடி போராட்டம் நடத்தினர்.

பேரியம் நைட்ரேட் பயன்படுத்தாமல் பசுமை பட்டாசு உற்பத்தி செய்வதற்கான முறையை ஏற்படுத்த மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறைக்கு (பெசோ) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதில் பேரியம் நைட்ரேட் இல்லாமல் பட்டாசு தயாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் பெசோ சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் (நீரி) மற்றும் பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள்கள் பாதுகாப்பு அமைப்பு (பெசோ) ஆகிய அமைப்புகளால் குறைந்த அளவில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான விதிகள் வெளியிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் பட்டாசுக்கு தடை கோரிய வழக்கு தொடரப்பட்டது. இதில் குறைந்த அளவு பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு தயாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நீரி விஞ்ஞானிகள் உருவாக்கிய பார்முலா படி பட்டாசு உற்பத்தியாளர்கள் அனுமதி பெற்று பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து வருகின்றனர். இதற்காக சிவகாசியில் பட்டாசு ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டு தனியார் கல்லூரியில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சிவகாசி அருகே தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்(நீரி) சார்பில் ரூ.15 கோடி மதிப்பில் பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மையத்திற்கு கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கவும், சரவெடி உற்பத்தி செய்ய அனுமதி வழங்க கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தற்போதைய சூழ்நிலையில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு உற்பத்தி செய்யவும், அவற்றை விற்பனை செய்யவும் அனுமதி இல்லை என தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் 2018-ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடையை அதிகாரிகளும் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் சிவகாசியில் பட்டாசு தொழில் பாதிக்கப்படும் என உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறுகையில், “தீபாவளிக்கு பண்டிகையை பிரதானமாக கொண்டு சிவகாசியில் ஆண்டு முழுவதும் பட்டாசு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிப்பதற்கு நீதிமன்றம் கட்டுப்பாடு விதிப்பதால் பட்டாசு தொழில் முழுவதுமாக முடங்கும் அபாயம் நிலவுகிறது. பட்டாசு தொழில் முடங்குவதை தடுக்க பண்டிகை நாட்களில் மட்டும் பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகளை நீக்க மத்திய அரசு சிறப்பு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்றனர்.

இது குறித்து பட்டாசு தொழிலாளர்கள் கூறுகையில், “2018-ம் ஆண்டு பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையால் சிவகாசியில் ஆலைகள் மூடப்பட்டது. கரோனா ஊரடங்கால் வேலையிழப்பு, பட்டாசு விற்பனை சரிவு மற்றும் பட்டாசு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தது போன்ற பல்வேறு காரணங்களால் பட்டாசு தொழிலை நம்பி உள்ள பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நல வாரியம் உருவாக்கி உதவியது. மத்திய அரசு சிவகாசியில் பட்டாசு வேதிபொருள் ஆராய்ச்சி மையம் அமைக்க அனுமதி வழங்கியது. அதேபோல் பட்டாசு தொழிலை நம்பி உள்ள பல லட்சம் தொழிலாளர்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE