உலகில் வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம் - ஒரு பார்வை

By க.ஆனந்தன்

கரோனா பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற காரணங்களால் வளர்ந்த நாடுகள் உள்பட பல்வேறு உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியால் திணறிவருகின்றன. இந்தச் சூழலில் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பி இருக்கிறது. கடும் சவால்களுக்கு மத்தியிலும் உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது.

இந்தியப் பொருளாதாரம் கடந்த வந்த பாதை: இந்தியர்கள் பொதுவாகச் சேமிக்கும் பழக்கம் கொண்டவர்கள். இது அவர்களுடைய தனிப்பட்ட பொருளாதார நிலையை உயர்த்தினாலும், இந்தியப் பொருளாதார வளர்ச்சி, ஸ்திரத்தன்மைக்கு அடித்தளமாக விளங்குகிறது. அதனால்தான் சர்வதேச மந்தநிலைக்கு நடுவிலும் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படவில்லை. எனவே, இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசின் கொள்கைகள் காரணமாக இருந்தாலும், பொதுமக்களின் சேமிக்கும் பழக்கமும் ஒரு முக்கியக் காரணம் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2014இல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றது. அதன் பிறகு மேலும் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில் ’மேக் இன் இந்தியா’ என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் அந்நியச் செலாவணி மிச்சமாகும் என அரசு கருதியது. பல்வேறு வகையான வரி நடைமுறைகளை மாற்றி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. ஸ்டார்ட்-அப் இந்தியா, முத்ரா கடன், உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத் தொகை திட்டம் எனத் தொழில் துறையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. அந்நியச் செலாவணியில் முக்கியப் பங்கு வகிக்கும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவுசெய்தது.

இதன்படி மின் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. மேலும் நம் நாட்டைப் பொறுத்தவரை ராணுவத் தளவாடங்களைப் பெருமளவில் இறக்குமதி செய்து வருகிறோம். இதைக் குறைப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால் வெளிநாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்க முன்வந்துள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகளால் நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்கும் என மத்திய அரசு கருதுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாக உள்ளது. இந்த நிலையை மாற்றி இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

கரோனா பாதிப்பு: மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இடையேதான் 2019 இறுதியில் சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தென்பட்டது. இப்பாதிப்பு உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதையடுத்துப் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஓராண்டுக்கும் மேலாக உலகம் முழுவதும் அனைத்து வகை போக்குவரத்தும் முடங்கின. தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மூடப்பட்டன.

இதனால் உலகம் முழுவதும் மீண்டும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. லட்சக்கணக்கானோர் வேலையிழந்தனர். இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உலக நாடுகளின் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.1% ஆக சரிந்தது. இந்தியாவின் ஜிடிபி -6.6% ஆகப் பதிவானது.

ரஷ்யா–உக்ரைன் போர்: 2021 பிற்பாதியில் கரோனா தாக்கம் குறைந்து உலகம் முழுவதும் இயல்புநிலை திரும்பியது. இந்தச் சூழலில் 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் இந்தப் போரில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கிவருகின்றன. ரஷ்யாவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது.

இப்போர் காரணமாக ரஷ்யா, உக்ரைன் நாடுகளிலிருந்து உணவுப் பொருள்கள் ஏற்றுமதி செய்வது தடைபட்டது. பல்வேறு நாடுகளில் உணவுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், இந்தியா உள்பட உலகம் முழுவதும் பணவீக்கம் கடுமையாக அதிகரித்தது. கடந்த ஆண்டில் சர்வதேசப் பணவீக்கம் 8.7 சதவீதமாக அதிகரித்தது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகளின் மத்திய வங்கிகள் கடன் வட்டியை அதிகரித்தன.

இதன் காரணமாக, அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இன்னமும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள முடியாமல் திணறி வருகின்றன. நம்முடைய அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானிலும் எரிபொருள், உணவுப்பொருள்களின் விலை உயர்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பணவீக்கம் அதிகரிப்பு, கடன் வட்டி உயர்வால் அமெரிக்காவில் சில வங்கிகள் திவால் நிலைக்குச் சென்றன. கடன் அளவு உச்சவரம்பை மீறியதால், கடந்த மே மாதம் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இதையடுத்து, கடன் உச்ச வரம்பை அதிகரிக்க அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அங்கு நிலைமை சீரடைந்தது.

உலக நாடுகளின் சராசரிப் பொருளாதார வளர்ச்சி 2022இல் 3.5% இருந்தது. இது 2023-24இல் 3% குறையும் என சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund - IMF) கணித்துள்ளது. இதுபோல் சர்வதேசப் பணவீக்கம் நடப்பாண்டில் 6.8% குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் அமெரிக்காவின் பொருளாதாரம் 1.5%, சீனா 5.2%, ஜப்பான் 1.4%, ஜெர்மனி -0.3% ஆக இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

5ஆவது பெரிய பொருளாதாரம்: உலக நாடுகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள போதிலும், இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. உலக அளவில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டில் உலக அளவில் ஜிடிபி அடிப்படையில் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இந்தியா 5ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு மதிப்பு 3.75 லட்சம் கோடி டாலராகி (ரூ.311 லட்சம் கோடி) உள்ளது. 5ஆம் இடத்தில் இருந்த பிரிட்டன் 6ஆம் இடத்துக்குப் பின்தங்கி உள்ளது.

2021-22 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு மதிப்பு 9.1%. இது 2022-23 நிதியாண்டில் 7.2% ஆகப் பதிவானது. இது சர்வதேச நிதி அமைப்புகளின் கணிப்பைவிட அதிகம். நடப்பு 2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு மதிப்பு 7.8% வளர்ந்துள்ளது. இது நடப்பு 2023-24 நிதியாண்டில் 6.5% ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி இதே வேகத்தில் சென்றால் 2030க்குள் ஜெர்மனி, ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி உலகின் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 3ஆம் இடத்துக்கு முன்னேறும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

- anandhan.k@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

மேலும்