வணிக நூலகம்: உயர்வு தரும் ஊக்கம்!

By டாக்டர் பி.கிருஷ்ணகுமார்

னிப்பட்ட நபர்களுக்கான தன்னம்பிக்கை மற்றும் ஊக்கமளிக்கும் வகையிலான கருத்துக்களைக் கொண்ட பல்வேறு புத்தகங்களைப் பற்றி அறிந்திருப்போம். அவற்றிலிருந்து சிறிது மாறுபட்டு, மற்றவர்களிடம் எவ்வாறு ஊக்கத்தை ஏற்படுத்துவது என்பதற்கான வழிமுறைகளைச் சொல்கிறது “ஸ்டீவ் சாண்ட்லர்” மற்றும் “ஸ்காட் ரிச்சர்ட்சன்” ஆகியோரால் எழுதப்பட்ட “100 வேஸ் டு மோட்டிவேட் அதர்ஸ்” என்னும் இந்தப் புத்தகம்.

வெற்றிகரமான தலைமைத்துவ பயிற்சியளிப்பு மற்றும் வழிகாட்டுதல்கள் என நீண்டகால அனுபவமுள்ள நூலாசிரியர்களின் ஊக்கமளிப்பு யுக்திகளானது நிர்வாகிகள், மேலாளர்கள் மற்றும் தொழில்துறையினர் போன்றவர்களுக்கு அவரவர் துறைகளில் பெரும் வெற்றிக்கான மாபெரும் உந்துசக்தியாகவும், தூண்டுதலாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், நமது அன்றாட செயல்பாடுகளில் இவற்றை எளிமை யாக செயல்படுத்தும் வகையில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

வார்த்தைகள் முக்கியம்!

நிறுவன மேலாளர் அல்லது சில பணியாளர்களை உள்ளடக்கிய ஒரு குழுவின் தலைவராக இருப்பவர், தனக்குக் கீழ் பணியாற்றும் குழுவினரின் செயல்திறன் பற்றியோ அல்லது அவர்களின் பிரச்சினைகளைப் பற்றியோ தனது நிறுவன தலைமையிடம் விவாதிக்கும்போது பயன்படுத்தவேண்டிய வார்த்தைகளைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்கள் ஆசிரியர்கள். அவர்களுடைய பிரச்சினை, அவர்கள் இப்படி செய்தார்கள், அவர்களுக்கு இது தேவை என்பதையெல்லாம் அறவே தவிர்த்து, எங்களுடைய பிரச்சினை, நாங்கள் இப்படி செய்தோம், எங்களுக்கு இது தேவை என்பனவற்றைப் பயன்படுத்த வேண்டும். இது குழுவினரிடையே பெரும் ஊக்கத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் செயல்பாடாகும். மேலும் தாங்கள் நிறுவனத்திலிருந்து தனிமைப்படுத்தபடவில்லை, தாங்களும் நிறுவனத்தின் ஒரு பகுதியே என்ற எண்ணமும் பணியாளர்களின் மனதில் ஆழப்பதியும்.

ஒரு நேரம், ஒரு வேலை!

நம்மால் சரியான விஷயங்களை செய்ய முடியவில்லை என்றால், நம்மால் மற்றவர்கள் சரியான விஷயங்களைச் செய்வதற்காக அவர்களை ஊக்கப்படுத்தவும் முடியாது என்பதை ஒரு அடிப்படை விஷயமாக மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு என்ன செய்யவேண்டும் என்கிறீர்களா?. ஒரு நேரத்தில் ஒரே வேலையை ஒழுங்காக செய்வதையே இதற்கான பதிலாகக் குறிப்பிட்டுள்ளனர் ஆசிரியர்கள். பல வேலைகளைக் கையில் வைத்துக்கொண்டும், மனதில் அதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டும் இருக்கும்போது மனச்சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதோடு மற்றவர்களுடனான உறவுமுறைகளிலும் பெரும் இடை வெளியை ஏற்படுத்திவிடும். மேலும் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும்போது பயம், தடுமாற்றம், குழப்பம் மற்றும் கவலைகள் போன்றவை உருவாகவும் வாய்ப்புகள் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.

நமது மனமும், ஒரு நேரத்தில் ஒரு வேலையின் மீதான சிந்தனைகளை மட்டுமே திறம்பட கையாளும். பணியிட மன அழுத்தத்திற்கான முக்கிய காரணிகளாகப் பார்க்கப்படுவது, நமது மனம் பல எண்ணங்கள், பல திட்டங்கள், பல பணிகள், பல அக்கறைகள், பல கவலைகள் என பலவற்றை செயல்படுத்த முயற்சிப்பதே என்கிறார்கள் ஆசிரியர்கள். இவற்றையெல்லாம் நமது மனதால் ஒரே நேரத்தில் செய்ய முடியாது என்பதே உண்மை.

உங்கள் நண்பர் ஒருவரிடம் தொலைபேசியில் பேச விரும்பு கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு முன்னதாகவே உங்களைக் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துக்கொண்டு, பின்னர் பேசத்தொடங்கினால் மட்டுமே, அந்த உரையாடல் இருவருக்கும் ஒரு நல்ல அனுபவ மாக இருக்கும். தொலைக்காட்சி பார்த்துக்கொனண்டோ, நியூஸ் பேப்பர் படித்துக்கொண்டோ அல்லது வேறு ஏதேனும் பணிகளில் கவனம் செலுத்திக்கொண்டோ பேசினால் உங்கள் மனம் அதில் முழுமையாக ஈடுபடுமா என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

கருத்து தெரிவித்தல்!

இரண்டு அல்லது மூன்று வயது குழந்தையை தொடர்ந்து ஓரிரு முறை புறக்கணித்துப் பாருங்கள், அது உரத்த குரலில் சப்தமிடவோ அல்லது அழவோ தொடங்கிவிடும். உண்மையில் இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி நம்மில் பெரும்பாலானோருக்கு பொருந்தும் என்கிறார்கள் ஆசிரியர்கள். ஆம், நேர்மறையானதோ அல்லது எதிர்மறையானதோ, நம்மீதான மற்றவர்களின் கருத்துக்களை தெரிந்துகொள்வதில் எப்போதுமே நாம் அதீத ஆர்வம் கொண்டிருப்போம். மிகப்பெரிய சாதனைகளுக்கு தொடர்ச்சியான கருத்துக்கள்தான் ஊட்டச்சத்து. இவ்வித கருத்து தெரிவித்தலே, ஊக்கமளித்தலில் பெரும்பங்கு வகிக்கின்றன. நமது தவறுகளைச் சுட்டிக்காட்டி தெரிவிக்கப்படும் கருத்துக்கள் அவற்றை திருத்திக்கொள்வதற்கும், நல்ல செயல்களுக்கான கருத்துக்கள் அடுத்தக்கட்ட முன்னேற்றத்திற்கும் உதவுகின்றன.

பரிசோதனையின் பலன்!

உங்கள் பணியாளர்களுக்கான மிகச்சிறந்த ஊக்கமளிப்பவராக நீங்கள் ஆகவேண்டுமா?. அப்படியானால், நல்ல பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வதில் அதிக ஈடுபாடு காட்டுங்கள் என்கிறார்கள் ஆசிரியர்கள். பரிசோதனைகள் ஒருபோதும் தோல்வியடைவதில்லை என்கிறார் புகழ்பெற்ற வர்த்தக ஆலோசகரும் பத்திரிகையாளருமான டேல் டௌடென். ஆம், உங்கள் செயல்பாட்டில் ஒரு புதிய முயற்ச்சியை பரிசோதனை செய்துபார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் நீங்களும் உங்கள் குழுவினரும் கற்றுக்கொள்ள ஏதோவொன்று இருந்தேதீரும்.

புது முயற்சி தோல்வியடைந்தாலும் கூட, அது ஒரு அனுபவமாகவே இருக்கும். மேலும் வழக்கமான செயல்பாடுகளிலிருந்து மாறுபட்டு, சிறிது புத்துணர்வையும் ஆர்வத்தினையும் பணியாளர்களிடம் ஏற்படுத்தும். பரிசோதனை வெற்றிபெற்றால் நன்மை, வெற்றிபெறவில்லை என்றால் அதில் சில மாறுதல்களை மேற்கொள்வது அல்லது அதிலிருந்து வெளியேறி அடுத்தகட்ட பணிகளில் கவனம் செலுத்துவது என்ற எண்ணத்தை உங்கள் மனதிலும், உங்கள் பணியாளர்களின் மனதிலும் ஏற்படுத்திவிடுங்கள். பிறகென்ன, நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிசோதனை யும் பஞ்சுமிட்டாய் போலாகிவிடும்.

வலிமையை அறியுங்கள்!

உங்களால் ஊக்கமூட்டப்படும் உங்கள் பணியாளர்கள் அல்லது உங்கள் குழுவினரின் தனிப்பட்ட வலிமையை அறிந்துக்கொள்வது அவசியமான ஒன்று. அவர்களின் பலம் என்ன என்று தெரிந்தால் மட்டுமே, அதற்கேற்ற தெளிவான ஊக்கத்தை உங்களால் அவர்களுக்கு அளித்திட முடியும் என்பதே ஆசிரியர்களின் வாதமாக இருக்கின்றது. நிறுவனத்தின் எந்த பிரிவில் அவர்களை ஈடுபடுத்தலாம், எந்த பணியை அவர்களால் எளிதாகவும் திறம்படவும் செய்துமுடிக்க முடியும், எதில் அவர்களுக்கு தடுமாற்றம் இருக்கின்றது போன்ற விஷயங்களை அறிந்துக்கொள்வதற்கான அடிப்படை, அவர்களின் வலிமையை அறிந்துக்கொள்வதே.

ஒரு குறிப்பிட்ட பணியில் ஈடுபட்டு, மெதுவாக முன்னேற்றமடைந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்முன் அச்செயலிலிருந்து வெளியேறிவிடக் கூடாது என்பதில் அதீத உறுதி வேண்டும். சிறு ஏமாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறி தெரிந்தவுடனேயே சிலர் செயல்பாட்டிலிருந்து வெளியேறிவிடுவதைப் பார்க்கமுடிகிறது. இது ஆபத்தான விஷயம் என்கிறார்கள் ஆசிரியர்கள். ஆம், வெகு சீக்கிரமாக வெளியேறும் இப்பழக்கம் நாளடைவில், நிர்ணயித்துக்கொண்ட எவ்வித இலக்கினையும் அடையவிடாமல் பழக்கப்படுத்திவிடும். மேற்கொண்ட பணியிலிருந்து வெகு விரைவில் வெளியேறாமல் தொடர்ந்து செயல்படுபவர்கள், வெகு விரைவில் வெற்றிக்கோட்டை எட்டுகிறார்கள்.

வரம்பற்ற கற்றல்!

எனக்கு எல்லாம் தெரியும் என்பவரைவிட, நான் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறேன் என்பவரின்மீதே இந்த உலகம் அதிக நம்பிக்கை வைக்கும். தொடர்ச்சியான கற்றல் இல்லாத நிர்வாகிகள், மேலாளர்கள் சிலர் தங்களது பணியில் ஒருவித பாதுகாப்பற்ற நிலையையே உணர முடியும். நாம் ஒவ்வொருவரும் நமது தொழில் அல்லது பணி சார்ந்த ஏதோ ஒரு புதிய விஷயத்தை ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ள முயற்சிக்கவேண்டும். சிறிது சிறிதாக நம்மிடம் சேரும் இந்த அறிவாற்றலானது, நமது தொழில் சார்ந்த ஆற்றலையும், மற்றவர்களை ஊக்கப்படுத்தும் திறனையும் நாளடைவில் நம்மிடம் வளர்த்தெடுக்கும்.

கிள்ளி எடுத்த அளவிற்கே இங்கு கொடுக்க முடிந்திருந்தாலும், அள்ளி எடுத்துக்கொள்ளும் அளவிற்கு அளவில்லாத விஷயங்களைக் கொண்டுள்ளது இந்தப் புத்தகம்.

p.krishnakumar@jsb.ac.in

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE