போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திறந்தவெளியில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திறந்தவெளியில் நெல் மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் நடை பெற்று வருகின்றன. இதனால், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், நேரடி நெல் கொள் முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகளின் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

இதில், நெல் மூட்டை களுக்கு உரிய விலை கிடைப்பதால் சேத்துப் பட்டு மற்றும் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு தினசரி சுமார் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் வரத்து உள்ளன.

போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு அறைகள் நிரம்பி விட்டதால், திறந்த வெளியில் மட்டும் சுமார் 3 ஆயிரம் நெல் மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நெல் மூட்டைகள் வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால், ஒழுங்குமுறை விற்பனை கூடம் திணறுகிறது. வரத்துக்கு ஏற்ப, நெல் மூட்டைகளை துரிதமாக எடைபோட்டு வெளியே அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திறந்தவெளியில் நெல் மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும், அவர்கள் கூறும்போது, “போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள சுமார் 3 இருப்பு அறைகளில் நெல் மூட்டைகள் நிரம்பி கிடக்கின்றன. மேலும், நெல் மூட்டைகள் அதிகளவில் வருவதால், திறந்தவெளி இடத்திலும் நெல் மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. மழை பெய்து வருவதால், நெல் மூட்டைகளை பாதுகாக்க முடியாமல் தவிக்கிறோம்.

தார் பாயால் மூடினாலும் பலனில்லை. மழைக்கு அஞ்சி நெல் மூட்டைகளை விவசாயிகள் சிலர் வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர். இதனால், இரட்டிப்பு செலவு ஏற்படுகிறது. எனவே, கூடுதல் இருப்பு அறைகளை கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE