உத்தராகண்ட் உலக முதலீட்டாளர் மாநாடு | முன்னேற்பாட்டு பணிகளுக்கான தொடக்க விழா: முதல் நாளிலேயே 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

சென்னை: உத்தராகண்ட் மாநிலத்தில் டிசம்பர் மாதத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், முன்னேற்பாட்டு பணிகளுக்கான தொடக்க விழா புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது ஐடிசி நிறுவனம் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்வதாக முன்மொழிவு வழங்கியுள்ளது. மஹிந்திரா ஹாலிடேஸ் அண்டு ரிசார்ட்ஸ் இந்தியா நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு செய்யவும், இ-குபேர் நிறுவனம் ரூ.1,600 கோடி முதலீடு செய்யவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.

முதல் நாளிலேயே இவ்வளவு பெரிய முதலீட்டு முன்மொழிவுகள் வந்துள்ளதால் உத்தராகண்ட் மீது முதலீட்டாளர்கள் எவ்வளவு ஆர்வமாக உள்ளனர், அரசு எந்த அளவுக்குத் தயாராக உள்ளது என்பதை காட்டுகிறது.

மஹிந்திரா ஹாலிடேஸ் அண்டு ரிசார்ட்ஸ் இந்தியா நிறுவனம் அடுத்த 3 மாதங்களில் உத்தராகண்ட் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் 45 ரிசார்ட்டுகளை ரூ.1,000 கோடி முதலீட்டில் அமைக்க உள்ளது. இதன் மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்நிறுவனம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு இங்கு மிகப்பெரிய முதலீடு செய்யவுள்ளது.

உலக முதலீட்டாளர் மாநாடு டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளதை ஒட்டி புதுடெல்லியில் உள்ள தாஜ் மஹால் ஓட்டலில் முன்னேற்பாட்டு பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர் பேசும்போது, “தொழில்களுக்கு அபரிமிதமான வாய்ப்புகள் உள்ள இளம் மாநிலமாக உத்தராகண்ட் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இங்கு செயல்படும் தொழிற்சாலைகளில் தொழிலாளர் அதிருப்தி சம்பவங்கள் ஏதுமில்லை. எனவே எளிதாகத் தொழில்களைச் செய்ய முடியும். உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.2.5 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE