சென்னையில் மிகப் பெரிய ஷாப்பிங் மால் அமைக்க திட்டம்: லுலு குழும தலைவர் யூசுஃப் அலி தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சென்னை மற்றும் அகமதாபாத் நகரங்களில் மிகப் பெரிய ஷாப்பிங் மால்களைக் கட்டப் போவதாக லுலு குழுமத் தலைவர் யூசுஃப் அலி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னை மற்றும் அகமதாபாத் நகரங்களில் நாங்கள் மிகப் பெரிய ஷாப்பிங் மால்களைக் கட்டப் போகிறோம். ஹைதராபாத்தில் கட்டப்பட்டுள்ள ஷாப்பிங் மால் இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஷாப்பிங் மால்களையும், உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களையும் நாங்கள் நிறுவ உள்ளோம்.

கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு, லக்னோ, கோவை ஆகிய 5 நகரங்களில் எங்கள் மால்கள் செயல்பட்டு வருகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எங்கள் குழுமம், மத்திய கிழக்கு நாடுகளிலும், வட ஆப்ரிக்க நாடுகளிலும் கிளைகளைக் கொண்டுள்ளது. இந்தியா, இந்தோனேஷியா, மலேசியா, எகிப்து ஆகிய நாடுகளில் 250-க்கும் மேற்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகளை நாங்கள் நடத்தி வருகிறோம்.

பிரதமர் மோடி - சவுதி அரேபிய இளவரசர் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே இன்று 10-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகி உள்ளன. தகவல் தொழில்நுட்பம், விவசாயம், மருந்து தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கு ஏற்ப இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன்மூலம், இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க அளவில் வர்த்தக மேம்பாடு ஏற்படும்.

இந்திய தொழில்துறையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொழில் தொடங்குவது எளிமையாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அகற்றி உள்ளது. அதற்காக அவருக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.

உலகத் தலைமை வகிக்கும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் ஜி20 மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அனைத்துத் தலைவர்களையும் இந்தியாவுக்கு வரவழைக்க பிரதமர் மோடி கடுமையாக உழைத்துள்ளார். இந்த உச்சி மாநாட்டின் மூலம் உலகின் மிகப் பெரிய தலைவர்கள் இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம் குறித்து அறிந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

மிகப் பெரிய வர்த்தக குழுமமான லுலு குழுமம் 42 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த குழுமத்தில் பணியாற்றி வருகிறார்கள். இதன் ஆண்டு வர்த்தகம் 8 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE