மியூச்சுவல் பண்ட் துறையில் பல நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட திட்டமிட்டுவந்தன. ஆனால் ரிலையன்ஸ் நிப்பான் லைப் மியூச்சுவல் பண்ட் நிறுவனம் முதலில் பொதுப்பங்கு வெளியிடும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இந்த நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரூ.2.3 லட்சம் கோடி அளவுக்கு சொத்துகளை கையாளும் இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சந்தீப் சிக்கா கடந்த வாரம் சென்னை வந்திருந்தார். மியூச்சுவல் பண்ட் துறை குறித்து அவருடன் உரையாடியதி லிருந்து...
மியூச்சுவல் பண்ட் துறை தற்போது எப்படி இருக்கிறது?
இந்திய மியூச்சுவல் பண்ட் துறை தற்போது ரூ.21 லட்சம் கோடியை கையாண்டு வருகிறது. ஐந்து ஆண்டுக்கு முன்பு இருந்ததை விட இப்போது மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு இந்த வளர்ச்சியை யாரும் கணித்திருக்க முடியாது. பணமதிப்பு நீக்கம், ஜன்தன், ரியல் எஸ்டேட், தங்கம், வட்டி விகித சரிவு ஆகிய காரணங்களால் இந்த வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இந்த வளர்ச்சி மகிழ்ச்சிக்குரியதாக இருந்தாலும் திருப்திகரமாக இல்லை. தற்போது கையாளும் ரூ.21 லட்சம் கோடியில் 10 லட்சம் கோடி கார்ப்பரேட் நிறுவனங்களுடையது. ரூ.6 லட்சம் கோடி பெரு முதலீட்டாளர்களுடையது (ஹெச்என்ஐ). மீதமுள்ள ரூ.5 லட்சம் கோடி மட்டுமே சிறு முதலீட்டாளர்கள் வசம் இருக்கிறது. இன்னும் செல்ல வேண்டிய தூரம் இருக்கிறது. சிறு நகரங்களில் இதற்கான மிகப்பெரிய தேவை இருக்கிறது. முன்பு முதல் 15 நகரங்களை நோக்கி செல்வதை இலக்காக வைத்திருந்தோம். இப்போது முதல் 100 நகரங்களை தாண்டி பெரிய வாய்ப்பு இருக்கிறது.
சமீபகாலங்களில் மியூச்சுவல் பண்ட்களில் அதிக வருமானம் கிடைத்து வருகிறது. இதன் காரணமாகத்தான் முதலீடுகள் வருகின்றன என்பது சரியா?
அரசாங்கத்தின் ஜன்தன் மற்றும் பண மதிப்பு நீக்கம் காரணமாகத்தான் மியூச்சுவல் பண்ட்களில் அதிக முதலீடு வந்திருக்கிறது. தவிர இதர திட்டங்களில் அதிக லாபம் இல்லாததால் மியூச்சுவல் பண்ட்களுக்கு முதலீடுகள் வருகின்றன. ஒரு சிறு பகுதி முதலீட்டாளர்கள் அதிக வருமானத்துக்காக வந்திருக்கலாம். ஒருவேளை தற்போதைய சூழலில் சந்தை சரியும் பட்சத்தில், ஏற்கெனவே எஸ்ஐபி மூலம் வரும் முதலீடுகள் அப்படியே இருக்கும். குறிப்பாக மாதத்துக்கு ரூ.5000-க்கு கீழ் முதலீடு செய்பவர்கள் வெளியேறமாட்டார்கள். ஆனால் புதிய முதலீடு செய்ய இருப்பவர்களின் எண்ணிக்கை குறையலாம்.
ஸ்மால்கேப், மிட்கேப், லார்ஜ் கேப் என அனைத்து பிரிவுகளின் சந்தை மதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. முதலீட்டாளர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?
குறிப்பிட்ட சில பங்குகளை அதிக முதலீடுகள் துரத்துவதால் சந்தை மதிப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். லார்ஜ் கேப் மியூச்சுவல் பண்ட்களை பொறுத்தவரை கடந்த காலங்களில் இருந்த வருமானம் இருக்காது. அதனால் அனுபவம் மிக்க மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் லார்ஜ் கேப் மியூச்சுவல் பண்ட்களில் இருந்து லார்ஜ் கேப் இடிஎப்-களுக்கு மாறலாம். மியூச்சுவல் பண்ட்களுக்கு செலவு விகிதம் சராசரியாக 2.50 சதவீதம் இருக்கிறது. ஆனால் இடிஎப்-களை பொறுத்தவரை 0.05 சதவீதம் அளவுக்கு மட்டுமே செலவு விகிதம் இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு பார்க்கும் பட்சத்தில் இடிஎப் மூலம் 18 சதவீதம் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
பங்குச்சந்தை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எப்போது சரியும் என்னும் அச்சம் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறதே?
எவ்வளவு சரிவு வரும் என்பதை கணிக்க முடியாது. மியூச்சுவல் பண்ட் மூலமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் தொகை முழுவதும் நீண்ட காலத்துக்கானது. ஆனால் சரிவு வரும் பட்சத்தில் பெரு முதலீட்டாளர்கள் வெளியேறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்திய சந்தை அடிப்படையில் பலமாக இருந்தாலும் ஒவ்வொரு நாளும் சந்தை உயராது என்பதை முதலீட்டாளர் புரிந்துகொள்ள வேண்டும். பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த பிறகுதான் சந்தை இந்த இடத்தில் இருக்கிறது. முதலீட்டை தொடங்க வேண்டும் என முடிவெடுத்தாலும் சரி, நிறுத்த வேண்டும் என முடிவெடுத்தாலும் சரி கடந்த இரு மாதங்களின் நிலைமையை பொறுத்து முடிவெடுக்க கூடாது.
மியூச்சுவல் பண்ட்களை ஒருங்கிணைக்க வேண்டும் என செபி வலியுறுத்தி இருக்கிறது. உங்கள் நிலைப்பாடு என்ன? பல நிறுவனங்கள் எதிர்த்திருப்பதாக தெரிகிறது?
செபி எடுத்திருக்கும் முடிவை வரவேற்கிறேன். நாங்கள் இதற்கு முழுமையான ஆதரவை தெரிவித்திருக்கிறோம். கருத்து வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை. இதை எப்படி செயல்படுத்தலாம் என ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது கருத்தை தெரிவித்திருக்கின்றன. உதாரணத்துக்கு மிட்கேப் பண்ட்கள் என்றால் சந்தை மதிப்பு அடிப்படையில் 100 முதல் 250 வரையிலான நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. சந்தை மதிப்பு என்பது தினமும் மாறக்கூடியது. ஒரு நிறுவனம் இந்த எல்லைக்குள் வரலாம், வெளியேறலாம். இது போல விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக ஒவ்வொரு நிறுவனங்களும் ஒருவித கருத்தை தெரிவித்திருக்கின்றன.
கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில் சமீபத்தில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறதே. எப்படி தேர்ந்தெடுப்பது?
கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில் ரிஸ்க் இல்லை என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. ஆனால் இவையும் ரிஸ்க்தான். இந்த பண்ட்களில் முதலீடு செய்யும்பட்சத்தில் வருமானத்தை விட நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு (கடன் சார்ந்த) எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். சில நிறுவனங்கள் கடன் சார்ந்த பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கடன் சார்ந்த பண்ட்களுக்கு அதிகபட்சம் இரு நிறுவனங்களை தாண்டி முதலீடு செய்ய வேண்டாம்.
மியூச்சுவல் பண்ட் துறையில் அடுத்து என்ன மாற்றங்கள் நடக்கலாம்?
பல புதிய பண்ட்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தற்போது பங்குச்சந்தை சார்ந்த திட்டத்துக்கு மட்டுமே வரி சேமிப்பு இருக்கிறது. கடன் சார்ந்த திட்டத்துக்கு வரி சேமிப்பு கிடைக்கலாம். கச்சா எண்ணெய் இடிஎப், சில்வர் இடிஎப் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஓய்வு காலத்துக்கு அதிகமான பண்ட்கள் வரலாம்.
karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago