வளரும் பருவத்தில் மழை இல்லாததால் சித்தேரி மலைப் பகுதியில் சாமை விளைச்சல் பெரும் பாதிப்பு

By எஸ்.செந்தில்

அரூர்: சித்தேரி மலைப்பகுதியில் போதிய மழையின்மையால் இந்த ஆண்டு சாமை விளைச்சல் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மலைப் பகுதியில் உள்ள சித்தேரி ஊராட்சி 61 குக் கிராமங்களை உள்ளடக்கியது. சித்தேரி, சூரியகடை, ஏமத்தி, நெரிகாடு, நொச்சிகுட்டை, எருமகடை, கலசப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே மக்கள் உள்ளனர். சில கிராமங்களில் மட்டுமே கிணறு பாசனம் மூலம் நெல், வாழை, மலர் சாகுபடியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். மற்ற இடங்களில் மானாவாரி பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக சாமை, திணை, வரகு, கம்பு, கேழ்வரகு உள்ளட்ட சிறுதானிய பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றனர். இங்கு விளை விக்கப்படும் சிறு தானியங்களுக்கு அரூர் பகுதியில் நல்ல வரவேற்பு உள்ளது. சித்தேரி மலைக் கிராமங்களில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் சிறுதானியப்பயிர்கள் பயிரிடப்பட்டு 400 டன் வரை மகசூல் எடுக்கப்படுகிறது.

இந்த ஆண்டும் 400 ஏக்கருக்கும் மேல் சாமை, கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்கள் பயிரிடப்பட்டுள்ளன. சாமை பயிருக்கு ஏற்ற மழை இல்லாததால் பயிர்கள் போதிய வளர்ச்சி இல்லாமல் இருந்தது. பயிர் வளரும் பருவம் மற்றும் கதிர் பிடிக்கும் தருணங்களில் பெய்ய வேண்டிய மழை கடந்த மாதங்களில் பெய்யாததால் விளைச்சல் குறைவாக உள்ளது.

ஆனால், அறுவடை தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கதிர்கள் தரையில் சாய்ந்து வீணாகி வருகிறது. இது குறித்து சித்தேரி விவசாயி வெங்கடேசன் கூறியதாவது: ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம் வரை செலவிட்டு சாமை பயிரிட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விளைச்சல் பாதிக்கு மேலாக குறைந்து விட்டது.

பருவத்தின் போது சரியாக பெய்யாத மழையே இதற்கு காரணமாகும். கடந்த ஆண்டு இப்பகுதியில் இருந்து 200 டன்னுக்கும் அதிகமாக விளைச்சல் கிடைத்தது. ஆனால் இந்த முறை விளைச்சல் இல்லாததால் அடுத்தாண்டுக்கான விதை தானியத்திற்கு மட்டுமே சாமை கிடைக்கும் நிலை உள்ளது. சாமை பயிரிட்டுள்ள பெரும்பாலான விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE