என்டிசி ஆலைகள் இயங்காததால் 15,000 குடும்பத்தினர் பாதிப்பு - மத்திய அரசு மீது தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டு

By இல.ராஜகோபால்

கோவை: தமிழகத்தில் 7 உட்பட நாடு முழுவதும் உள்ள 23 என்டிசி நூற்பாலைகள் கடந்த 40 மாதங்களுக்கு மேலாக முடங்கி கிடக்கும் நிலையில், 15 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முயற்சிகள் தொடரும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாலை கழகத்துக்கு (என்டிசி) சொந்தமாக நாடு முழுவதும் 123 நூற்பாலைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் பல நூற்பாலைகள் தொடர்ந்து மூடப்பட்டன. தமிழகத்தில் 7 உட்பட நாடு முழுவதும் 23 நூற்பாலைகள் மட்டும் செயல்பட்டு வந்த நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக 2020ம் ஆண்டு மே மாதம் அனைத்து நூற்பாலைகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தொற்று பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பிய போதும் 23 நூற்பாலைகளை மீண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இது குறித்து, எச்எம்எஸ் தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் ராஜாமணி, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் தங்கவேல் ஆகியோர் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை மத்திய அரசுக்கு இல்லை. மாறாக அவற்றை தனியாருக்கு விற்பனை செய்வதில் மட்டுமே அக்கறை காட்டி வருகிறது.

கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் புதிதாக ஒரு பொதுத்துறை நிறுவனம் கூட தொடங்கப்படவில்லை. ஏற்கெனவே உள்ள பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்றவும் அக்கறை இல்லை. சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சியில் என்டிசி தொடர்பான கோரிக்கை குறித்து மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்த பதில் இதற்கு உதாரணம்.

என்டிசி நூற்பாலைகளை இயக்குவது குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து கோப்புகள் வந்த பின் தான் முடிவு செய்யப்படும் என கூறினார். கடந்த 40 மாதங்களாக உற்பத்தி முடக்கப்பட்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது குறித்து சிறிதளவு கூட அக்கறை காட்ட மத்திய அரசு மறுக்கிறது.

அரசு நிதி ஒதுக்கீடு செய்தால் நாடு முழுவதும் உள்ள 23 என்டிசி நூற்பாலைகளையும் நவீன மயமாக்கி அவற்றை சிறப்பான முறையில் இயக்க முடியும். என்டிசி சொத்துக்களை விற்பனை செய்து கிடைக்கும் தொகை என்டிசி மேம்பாட்டு பணிகளுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

எனவே, மத்திய அரசு நினைத்தால் அதுபோன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். ஏற்கெனவே பல கட்ட போராட்டங்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போதும் என்டிசி பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்த முடிவு செய்துள்ளோம்.

தமிழகத்தில் 4 ஆயிரம் உட்பட நாடு முழுவதும் 15 ஆயிரம் என்டிசி தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை காக்க தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் அனைத்து என்டிசி நூற்பாலைகளும் மீண்டும் இயக்கப்படும் வரை தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE