ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டொளி வீசாத பட்டுக்கூடு வளர்ப்பு: விவசாயிகள் வேதனை

By ப.தாமோதரன்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டுக்கூடு வளர்ப்பில் கடந்த சில மாதங்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மட்டுமின்றி விவசாயமும் பிரதான தொழிலாக உள்ளது. நெல், கரும்பு உட்பட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. அதே சமயத்தில் நெமிலி, காவேரிப்பாக்கம், அரக்கோணம், வாலாஜா, திமிரி, பனப்பாக்கம் உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பட்டுக்கூடு வளர்த்து வருகின்றனர். ஆரம்பத்தில் விவசாயிகளுக்கு இது லாபகரமான தொழிலாக இருந்து வந்தது.

கடந்த சில மாதங்களாக காலநிலை மாற்றத்தால் பட்டுக்கூடு வளர்ப்பில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். பலரும் லாபம் இல்லாத காரணத்தினால் மாற்று பயிர் செய்யவும் தயாராகி வருகின்றனர். அதே நேரத்தில் பட்டுக்கூடு வளர்க்கும் விவசாயிகளுக்கு இளம்புழுக்கள் மற்றும் தரம் இல்லாத முட்டைகளால் பாதிப்பு ஏற்படும்போது, விவசாயிகளை பாதுகாக்க பட்டு வளர்ச்சி துறையின் மூலமாக பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது, பட்டுக்கூடு வளர்ப்பு தொழில் பாதிக்கப்பட்டு விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். தற்போது, காப்பீட்டு தொகை கிடைத்தால் பாதிப்பில் இருந்து ஓரளவுக்கு தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதல் விவசாயிகள் சார்பில் பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட பட்டுக்கூடு வளர்ப்பாளர்கள் சங்க நிர்வாகி பூங்காவனம் கூறும்போது, "மாவட்டத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுக்கூடு வளர்க்கும் தொழில் செய்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முதல் வழங்கப்பட்ட இளம்புழுக்கள் ஆரம்பத்திலேயே இறந்து விடுகின்றன. மேலும், பல புழுக்கள் மலட்டுத்தன்மையுடன் உள்ளன.

முட்டை பால் புழுக்கள் பாதிப்பு, அதிக வெயில் மற்றும் காலநிலை மாற்றத்தால் பட்டுக்கூடு வளர்ப்பு பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், இளம் புழுக்களை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனியார் இளம்புழு வளர்ப்பு மையத்தில் இருந்தும், தருமபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வாங்குகிறோம். 100 முட்டை தொகுதியை 4 ஆயிரத்து 800 ரூபாய்க்கு வாங்கி வருகிறோம்.

இதுபோக பட்டுக்கூடு மனை அமைத்தல், தேவையான மருந்து பொருட்கள், கிருமி நீக்கம், பணியாளர்களுக்கு கூலி என பல்வேறு தரப்பில் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. மேலும், அரசு சார்பில் இளம் புழு வளர்ப்பு மையம் காஞ்சிபுரத்தில் உள்ளது. 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த இடத்தில் பட்டு இளம்புழுக்களை வளர்ப்பதில்லை. தனியாரிடமிருந்து அவைகளை வாங்கும்போது அதிகளவில் பணம் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

அப்படி வாங்கும் புழுக்கள் இதுபோன்ற காலநிலை மாற்றத்தால் வளர்ச்சியின்மை அடைந்து பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறோம். எனது நிலத்தில் பராமரிப்பு செலவுகளை கட்டுப்படுத்த ஒரு பகுதி மல்பெரி செடிகளை அகற்றும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில் பயிர்காப்பீடுக்கு விவசாயிகள் பங்களிப்பாக ரூ.290 மற்றும் பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.511 செலுத்தப்படுகிறது.

அவைகளை, விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டுக்கூடு வளர்க்கும் விவசாயிகளுக்கு அரசு, முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி, நஷ்டமடையும் நேரங்களில் மேற்கொள்ள வேண்டியவை குறித்து ஆலோசனைகள் வழங்க வேண்டும். மேலும், பயிர் காப்பீட்டு தொகையை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் பட்டுக்கூடு இளம் புழுக்கள் வளர்ப்பில் பிரச்சினை உள்ளது. நமது மாவட்டத்தில் அதிக வெயில், மழை என காலநிலை மாறி வருவதும் ஒரு காரணமாக உள்ளது.

இதுகுறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். பயிர் காப்பீடு தொகை விவசாயிகளுக்கு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அரசு சார்பில் இளம்புழுக்கள் வளர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவைகளும் விரைந்து வழங்கப்படும்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE