2000 ரூபாய் நோட்டுகளில் 93% வங்கிகள் வசம்; ரூ.24,000 கோடி நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன: ரிசர்வ் வங்கி

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியாவில் 2,000 ரூபாய் நோட்டுகளில் 93 சதவீதம் வங்கிகள் வசம் வந்து சேர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சுமார் 24,000 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி, ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் அறிவிப்பினை கடந்த மே 19-ம் தேதி வெளியிட்டது. இந்த நோட்டுகளை வரும் 30-ம் தேதி வரையில் மக்கள் மாற்றிக்கொள்ளலாம் என கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ரூ.2,000 நோட்டுகளை எளிதான முறையில் வங்கிகளில் மாற்றிக்கொள்ள போதுமான முன்னேற்பாடுகள் செய்யபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

“வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் 31, 2023 வரை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.32 லட்சம் கோடி. இதையடுத்து, புழக்கத்தில் உள்ள எஞ்சிய ரூ.2,000 நோட்டுகளின் மதிப்பானது தற்போது ரூ.24,000 கோடி என உள்ளது. இதன்படி புழக்கத்தில் இருந்த 93 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன” என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமலான போது புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதுபோல இல்லாமல் 2,000 ரூபாய் நோட்டுக்கு கால அவகாசம் கொடுத்துள்ளது. வரும் 30-ம் தேதி வரையில் இந்த கரன்சி நோட்டுகள் செல்லுபடியாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE