மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் விநாயகர் சிலைகளின் விலை உயர வாய்ப்பு

By எஸ்.செந்தில்

அரூர்: விநாயகர் சதுர்த்தியையொட்டி பொம்மிடி பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மூலப் பொருட்களின் விலை உயர்வால் சிலைகளின் விலை உயரும் வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்.18-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுபோல, தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

அரை அடி முதல் 1 அடி வரையிலான சிலைகள் களிமண் கொண்டும், 2 அடி முதல் 10 அடி வரையிலான சிலைகள் கிழங்கு மாவிலும் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பல்வேறு விதமான சிலைகள் தயாரிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது. கரோனா பாதிப்புக்கு முன்பு வரை விநாயகர் சதுர்த்தி விழா எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி நடைபெற்றது.

இதனால் விநாயகர் சிலைகள் விற்பனை அதிகமாக இருந்தது. ஆனால், கரோனா பாதிப்புக்கு பின்னர் சிலைகள் வைத்து வழிபட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் விநாயகர் சிலைகள் விற்பனை குறைந்தது. இந்நிலையில், விநாயகர் சிலைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் நிகழாண்டில் சிலைகளின் விலை உயரும் வாய்ப்புள்ளதாக சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பொம்மிடியில் சிலை தயாரித்து விற்பனை செய்து வரும் கோவிந்தராஜ் கூறியதாவது: கடந்த ஆண்டுகளில் அரை அடி முதல் 8 அடி வரையிலான சிலைகள் ரூ.100 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்றது. ஆனால், தற்போது மூலப்பொருட்களான களிமண், கிழங்கு மாவு, பெயின்ட் உள்ளிட்டவற்றின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது.

இதனால் விநாயகர் சிலைகளின் விலை கடந்த ஆண்டை விட 25 சதவீதம் வரை உயர வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டுகளில் போதிய விற்பனை இல்லாததால் ஏராளமான சிலைகள் மீதமானது. அவற்றை பாதுகாப்பது சவாலானதாக உள்ளதால் தற்போது சிலைகள் தயாரிப்பை குறைத்துள்ளோம்.

சிலைகள் தயாரிக்கும் பணி முடிந்து அவற்றுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி நெருங்கும்போது சிலைகள் விற்பனை தொடங்கும், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE