மின் கட்டண உயர்வு பாதிப்புகளை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல கூட்டமைப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

கோவை: மின் கட்டண உயர்வால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழில்முனைவோர் இணைந்து தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பை தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக, கூட்டமைப்பின் தலைவர் ஜேம்ஸ் மற்றும் செயலாளர் ஜெயபால் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மின் கட்டண உயர்வால் தமிழகத்தில் உள்ள எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எல்டிசிடி 111பி நுகர்வோருக்கு நிலை கட்டணம் ரூ.35-லிருந்து ரூ.153-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் கடந்த 11 மாதங்களாக குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக தமிழக தொழில்துறை, மின்சாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்தும், கோரிக்கை மனுக்களை அனுப்பியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

தொழில் அமைப்புகள் தனித் தனியாக முயற்சி செய்வதால் எந்த பலனும் ஏற்படாத நிலையில் கடந்த வாரம் திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி அமைப்பினர், பொறியியல் துறை உள்ளிட்ட உற்பத்தி பிரிவின்கீழ் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழில் அமைப்புகளை உள்ளடக்கிய ‘தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு’ தொடங்கப்பட்டது. இதன் முதல்கூட்டம் கோவையில் நடந்தது.

இதில் 50-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், முதல்கட்டமாக முதலமைச்சர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களுக்கு அனைத்து சங்க நிர்வாகிகள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு அளிப்பது, அடுத்தகட்ட கவன ஈர்ப்பு போராட்ட அறிவிப்பை செப்டம்பர் 1-ம் தேதி வெளியிடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE