நெருங்கும் ஓணம் பண்டிகை: கோவையில் பூக்கள் விற்பனை தீவிரம்

By டி.ஜி.ரகுபதி 


கோவை: ஓணம் பண்டிகை நெருங்குவதைத் தொடர்ந்து கோவையில் பூக்கள் விற்பனை தீவிரமடைந்துள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே, ஆர்.ஜி வீதியில் பூ மார்க்கெட் வளாகம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து வியாபாரிகள் பூ விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் பல்வேறு வகையான பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஓணம் பண்டிகை தினம் நெருங்குவதைத் தொடர்ந்து கோவை பூமார்க்கெட்டில் பூக்களின் விற்பனை தீவிரமடைந்துள்ளது. அதேசமயம், உற்பத்தி மற்றும் வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை கடந்தாண்டை ஒப்பிடும் போது, நடப்பாண்டு மூன்று முதல் நான்கு மடங்கு விலை குறைந்துள்ளது.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும்போது,‘‘ஓணம் பண்டிகைக்காக கேரளா மாநில மக்களால் செண்டு மல்லி, வாடா மல்லி, மல்லி, வெள்ளை செவ்வந்தி, வண்ண செவ்வந்தி, அரளி ஆகிய பூக்கள் அதிகளவில் வாங்குவர். இதில் செண்டு மல்லி, வாடா மல்லி உள்ளிட்ட மல்லி வகைகள் ஓசூர், தேன் கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள், சத்திய மங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. கடந்தாண்டு 15 முதல் 20 டன் வந்த இவை, தற்போது 100 டன் வருகிறது.வரத்து அதிகரிப்பால் சராசரி விலையே நிலவுகிறது.

கோவை பூ மார்க்கெட்டில் இன்றைய (ஆக.26) நிலவரப்படி கிலோ அடிப்படையில் செண்டு மல்லி ரூ.50 முதல் ரூ.60 வரையும், வாடா மல்லி ரூ.60 முதல் ரூ.70 வரையும், மல்லி ரூ.600-க்கும், அரளி ரூ.200-க்கும், வெள்ளை செவ்வந்தி ரூ.200-க்கும், வண்ண செவ்வந்தி ரூ.200-க்கும், முல்லைப் பூ ரூ.320-க்கும், ஜாதிப்பூ ரூ.400-க்கும் , செவ்வந்தி ரூ.160-க்கும், மஞ்சள் செவ்வந்தி ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கேரளாவுக்கும் குறிப்பிட்ட டன் பூக்கள் அனுப்பப்பட்டுள்ளன. வரத்து அதிகளவில் உள்ளதால் ஓணம் பண்டிகை நெருங்கும் சமயத்தில் கோவை பூ மார்க்கெட்டில் தற்போதைய விலையை விட, அந்த சமயத்தில் பூக்களின் விலையில் சற்று மாற்றங்கள் இருக்கலாமே தவிர, பெரிய விலை வித்தியாசம் இருக்காது என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE