ஓணம், வரலெட்சுமி பூஜை | மக்கள் திரண்டதால் விழாக்கோலம் பூண்ட மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ஓணம் பண்டிகை, வரலெட்சுமி பூஜையை முன்னிட்டு, மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. பூக்கள் வாங்க திருவிழா போல் மக்கள் திரண்டனர்.

தென் தமிழகத்தில் உள்ள மலர் சந்தைகளில் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் முக்கியமான சந்தையாக திகழ்கிறது. இந்த மார்க்கெட்டிற்கு, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் முதல் திருநெல்வேலி மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகிறது. மதுரை மல்லிகைக்கு இந்த மார்க்கெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மதுரை மல்லிகைப்பூக்கள் வாங்குவதற்கு கேரளா மற்றும் பிற மாவட்ட வியாபாரிகள் இந்த சந்தைக்கு வருகிறார்கள். விவசாயிகள், விழா காலங்களில் அதிகளவு மதுரை மல்லிகைப்பூக்களை விற்பனைக்கு வந்து சந்தை வியாபாரிகளிடம் வழங்குவார்கள். கரோனாவுக்கு பிறகு, மதுரை மல்லிகை தோட்டங்கள் பராமரிக்க முடியாமல் அழிந்துவிட்டன. அதன்பிறகு மதுரை மல்லிகை பூக்கள் வரத்து குறைவாகவே காணப்பட்டது. தற்போது ஓரளவு மல்லிகைப்பூக்கள் சாகுபடி தொடங்கி பூக்கள் வரத்து அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில், தற்போது ஓணம் பண்டிகை மற்றும் இன்று வரலெட்சுமி பூஜை வருவதால் மக்கள், சிறு, குறு வியாபாரிகள் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் திரண்டனர். மக்கள் கூட்டத்தால் நேற்று மார்க்கெட் திருவிழா கோலம் பூண்டிருந்தது. ஓணம் பண்டிகை, வரலெட்சுமி பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

மல்லிகைப்பூக்கள் ரூ.800 முதல் ரூ.900 வரை விற்பனையானது. முல்லைப்பூ ரூ.700, பிச்சிப்பூ ரூ.600, கனகாம்பரம் ரூ.500, அரளிப்பூ ரூ. 300, பட்டன் ரோஸ் ரூ.300, செவ்வந்திப்பூ ரூ.300, வாடாமல்லி ரூ.180, சம்பங்கி ரூ.200 போன்ற விலைக்கு பூக்கள் விற்பனை செய்தது. மற்ற கலர் பூக்களும் விலையும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து பூ வியாபாரஙகள் சங்கத்தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், ''விழாக்காலங்களை முன்னிட்டு இன்று முதல் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நாளையும், நாளை மறுநாளும் நீடிக்கும்,'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE