‘ஆசிய வளரும் நாடுகளில் 7 கோடி பேரை வறுமைக்குத் தள்ளிய கரோனா பெருந்தொற்று’

By செய்திப்பிரிவு

மணிலா: கரோனா பெருந்தொற்றின் தாக்கத்தின் காரணமாக ஆசியாவின் வளரும் நாடுகளில் கடந்த ஆண்டு 7 கோடி பேர் கடுமையான வறுமையில் வாடியதாக பிலிப்பைன்ஸை மையமாகக் கொண்ட ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆசிய வளர்ச்சி வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சில முக்கிய புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த 2022-ஆம் ஆண்டு ஆசியாவின் வளரும் நாடுகளில் 15.5 கோடி மக்கள் கடுமையான வறுமையில் சிக்கினர். இவர்களில் 6.78 கோடி பேர் கரோனா தாக்கம் வராவிட்டால் வறுமையில் சிக்கியிருக்க மாட்டார்கள். 2021-ல் மட்டும் கூடுதலாக 7.5 முதல் 8 கோடி மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளில் 2.15 அமெரிக்க டாலர் அதாவது ( இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.170) இல்லாமல் ஒருநாள் வாழ்க்கையை வாழ்பவர்கள் கடுமையான வறுமையில் இருப்பதாக உலக வங்கி வரையறுத்துள்ளது.

இந்நிலையில், ஆசியப் பிராந்தியத்தில் வளரும் நாடுகளில் நிலவும் வறுமையை ஒழிக்க எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கும் மத்தியில் 2030-க்குள் இங்குள்ள மக்கள் தொகையில் 30.3 சதவீதம் பேர், அதாவது 120 கோடி பேராவது அன்றாடம் $3.65 - $6.85 செலவுக்குள் ஒரு நாளைக் கடத்தும் சூழல் உருவாகும் எனக் கணிக்கப்படுகிறது.

இதற்குத் தீர்வாக, வளர்ந்துவரும் ஆசிய நாடுகள் (46 நாடுகளை உள்ளடக்கியது) தத்தம் நாடுகளில் சமூக நலத் திட்டங்களை வலுப்படுத்த வேண்டும், உட்கட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டும், தொழில்நுட்ப புதுமைகளை ஆதரிக்க வேண்டும் என்று ஆசிய வளர்ச்சி வங்கியானது தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE