இளைஞர்கள் மத்தியில் முத்திரை பதித்த ‘ஸ்டார்ட் அப்’ திருவிழா @ கோவை

By இல.ராஜகோபால்

கோவை: கோவையில் இரண்டு நாட்கள் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட ‘ஸ்டார்ட் அப்’ திருவிழாவில், மருத்துவஅவசர காலங்களில் பயன்படுத்தப்படும் டிரோன், மாற்றுத்திறனாளிகளுக்கான அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட வீல்சேர் என காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்கள் பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றதுடன், பல இளைஞர்கள் புதிதாக ஸ்டார்ட் அப் தொழிலில் ஈடுபட உத்வேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான பிரத்யேக கண்காட்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் கடந்த 19, 20-ம் தேதிகளில் நடைபெற்றது. ஸ்டார்ட் அப் தொழில்களை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வரிச் சலுகைகளை வழங்குகின்றன.

புதுமையான யோசனைகள் மட்டுமின்றி, சமுதாயத்துக்கு உதவும் நோக்கில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை செயல்படுத்தி அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் ‘ஸ்டார்ட் அப்’ அங்கீகாரம் வழங்கப்படும். கோவையில் நடைபெற்ற கருத்தரங்குகளில் பல்வேறு தொழில்களில் சாதனை படைத்த வல்லுநர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

கண்காட்சியில் 450 நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஸ்டால்களில் மெய்நிகர் தொழில்நுட்ப உபகரணங்கள், சிறுதானிய பொருட்களை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான மதிப்புகூட்டப்பட்ட உணவு பொருட்கள், விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனம் சார்பில் மருத்துவ அவசரகாலங்களில் பயன்படுத்த உதவும் ‘டிரோன்’ பார்வைக்குவைக்கப்பட்டிருந்தது. நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் மருந்து பொருட்களை விரைவில் கொண்டு சேர்க்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் டிரோன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான அதிநவீன தொழில் நுட்பத்துடன் உருவா க்கப்பட்ட வீல் சேர்.

தொலைதூர மற்றும் மலை கிராமப் பகுதிகளில் பாம்புக்கடி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ அவசர காலங்களில் உயிர்காக்கும் மருந்துகிடைக்காத சூழலில் அவ்விடங்களுக்கு இந்த டிரோன்கள் மூலம் மருந்துகளை கொண்டு செல்லலாம்.

கிராமத்தில் பாம்பு கடித்த சிறுவனை மருந்து இல்லாத காரணத்தால் காப்பாற்ற முடியாத சம்பவத்தை மையமாக கொண்டு தான் இத்தகைய டிரோனை தங்கள் நிறுவனத்தின் உரிமையாளர் தயாரிக்க தொடங்கியதாக அந்நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவித்தனர்.

மக்களுக்கும், ராணுவத்திற்கும் பயன்படும் வகையில் பல மாடல்களில் டிரோன்களை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. மாற்றுத்திறனாளிகள் தாங்கள் அமர்ந்துள்ள வீல்சேரை பல்வேறு பகுதிகளுக்கு எளிதில் இயக்கக்கூடிய வகையில் அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனமும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

பேட்டரியில் இயங்கக்கூடிய இந்த வாகனத்தை சமதளம் மட்டுமின்றி கரடு, முரடான சாலைகளிலும் எளிதில் இயக்கலாம். அதிகபட்சமாக மணிக்கு 25 கி.மீ.வேகத்தில் செல்லும் வசதி கொண்ட இந்த வாகனத்தில் பின்புறம் இயக்க பயன்படும் ரிவர்ஸ் கியர் வசதியும் உள்ளது. உட்கார்ந்து பணியாற்றும் இடங்களில் இருக்கையாகவும், இயக்கும்போது முன்பக்க கட்டமைப்பை எளிதில் கழற்றிவிட்டு பயணிக்கும் வகையிலும் வாகனம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

மேற்குறிப்பிட்ட கண்டுபிடிப்புகள் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் பயன்படுத்த உதவும் ஏராளமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இரண்டு நாட்கள் நடந்த நிகழ்வில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழிப்புணர்வு, கலந்துரையாடல், முதலீடு நிதி நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்தல் என ஸ்டார்ட் அப் தொழில் தொடங்க விரும்பிய இளைஞர்கள் மத்தியில் கோவையில் நடைபெற்ற ஸ்டார்ட் அப் திருவிழா முத்திரை பதித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE