இ-வர்த்தகம் | பெரிய, சிறிய வர்த்தகர்கள் இடையே சமமான போட்டியை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இ-வர்த்தகத்தில் பெரிய மற்றும் சிறிய விற்பனையாளர்களிடையே சமமான போட்டியை உறுதி செய்வது மிகவும் முக்கியம் என்று ஜி20 வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஜி20 வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய உரை விவரம்: "இளஞ்சிவப்பு நகரமான ஜெய்ப்பூருக்கு வந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன். இந்தப் பிராந்தியம் ஆற்றல்மிக்க தொழில்முனைவோர்களைக் கொண்டது. வர்த்தகம் என்பது கருத்துக்கள், கலாச்சாரங்கள் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. அதே நேரத்தில் வரலாறு முழுவதும் அது மக்களை நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது. வர்த்தகமும், உலகமயமாக்கலும் கோடிக்கணக்கான மக்களைத் தீவிர வறுமையிலிருந்து மீட்டுள்ளன.

வெளிப்படைத்தன்மை, வாய்ப்புகள் மற்றும் விருப்பங்களின் கலவையாக இந்தியா பார்க்கப்படுகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், அரசின் தொடர் முயற்சிகள் காரணமாக இந்தியா ஐந்தாவது பெரிய உலகப் பொருளாதாரமாக மாறியுள்ளது. 2014 ஆம் ஆண்டில் "சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம்" என்ற பயணத்தை நாங்கள் தொடங்கினோம். அதிகரித்த போட்டித்தன்மை மற்றும் மேம்பட்ட வெளிப்படைத்தன்மை, டிஜிட்டல் மயமாக்கல், கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் ஆகியவை காரணமாக இந்தியா வளர்ச்சிப் பாதையில் வேகமாகச் செல்கிறது. இந்தியா தனியாக சரக்குப் போக்குவரத்து வழித்தடங்களை நிறுவியுள்ளது.

தொழில்துறை மண்டலங்களை உருவாக்கியுள்ளது. நாங்கள் சிவப்பு நாடாவில் இருந்து சிவப்புக் கம்பளத்திற்கு மாறி, தாராளமயமாக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளோம். இந்தியாவில் உற்பத்தி, தற்சார்பு இந்தியா போன்ற எங்களின் முன்முயற்சிகள் உற்பத்திக்கு ஊக்கம் அளித்துள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவை மூன்றாவது பெரிய உலகப் பொருளாதாரமாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்று முதல் புவிசார் அரசியல் பதற்றங்கள் வரையிலான நிகழ்வுகள் உலகப் பொருளாதாரத்தை சோதித்துள்ளன. சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பு ஜி 20 நாடுகள் முன் இருக்கிறது. வர்த்தகத்தில் தொழில்நுட்பத்தின் மாறிவரும் சக்தி மறுக்க முடியாதது. இணையதள ஒற்றை மறைமுக வரியான ஜிஎஸ்டிக்கு இந்தியா மாறியிருக்கிறது. இது மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்தை ஊக்குவிக்கும் ஒரே உள்நாட்டு சந்தையை உருவாக்க உதவியிருக்கிறது. டிஜிட்டல் வணிகத்திற்கு வெளிப்படையான இணையதளம் என்பது மிகவும் முக்கியம். இது டிஜிட்டல் சந்தைச் சூழலை ஜனநாயகப்படுத்தும். ஏற்கனவே யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதை இந்தியா செயல்படுத்தி வருகிறது.

டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைகள், மின்னணு வணிகத்தின் பயன்பாடு ஆகியவை சந்தை அணுகலை அதிகரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. வர்த்தக ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கான உயர்நிலைக் கொள்கைகளை ஜி 20 நாடுகள் உருவாக்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லை தாண்டிய மின்னணு வர்த்தக நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும், சுமைகளைக் குறைப்பதற்கும் உதவும். எல்லை தாண்டிய இ-வர்த்தக வளர்ச்சியின் சவால், பெரிய மற்றும் சிறிய விற்பனையாளர்களிடையே சமமான போட்டியை உறுதி செய்வதுதான். நாம் இதை கூட்டாக செயல்படுத்த வேண்டும்.

உலக வர்த்தக அமைப்பை மையமாகக் கொண்டு விதிகள் அடிப்படையிலான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பலதரப்பு வர்த்தக முறையை இந்தியா நம்புகிறது. 12 வது உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டில் வளரும் நாடுகளின் கவலைகளை இந்தியா ஆதரித்துள்ளது. அங்கு லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் ஒருமித்த கருத்தை உருவாக்க முடிந்தது. எம்.எஸ்.எம்.இ.க்கள் உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதால், அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எம்.எஸ்.எம்.இ.க்கள் வேலைவாய்ப்பில் 60 முதல் 70 சதவீதத்தைக் கொண்டுள்ளன. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. எங்களைப் பொறுத்தவரை, எம்.எஸ்.எம்.இ என்றால் - குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிகபட்ச ஆதரவு என்று பொருள்.

அரசு இ-சந்தை என்ற இணைய தளத்தின் மூலம் எம்.எஸ்.எம்.இ.க்களை பொதுக் கொள்முதலில் இந்தியா ஒருங்கிணைத்துள்ளது. எம்.எஸ்.எம்.இ.க்கள் எதிர்கொள்ளும் சந்தை மற்றும் வணிகம் தொடர்பான தகவல்களுக்கு போதுமான அணுகல் இல்லாத சவாலை இது சரி செய்யும். உலகளாவிய வர்த்தக உதவி மையத்தை மேம்படுத்துவதன் மூலம் உலகளாவிய வர்த்தகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கேற்பு அதிகரிக்கும். சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு செயல்முறைகளில் நம்பிக்கையை மீட்டெடுப்பது ஒரு குடும்பம் என்ற முறையில் ஜி20 உறுப்பினர்களின் கூட்டு பொறுப்பு. உலகளாவிய வர்த்தக அமைப்பு படிப்படியாக மிகவும் பிரதிநிதித்துவமான, அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்திற்கு மாறுவதை உறுதி செய்வதற்காக பணிக்குழு கூட்டாக முன்னேறும் என்று நம்புகிறேன்" என்று பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்