புனரமைக்கப்படுமா அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை?

By எம்.நாகராஜன்

உடுமலை: உடுமலை அடுத்த அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனமாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கரும்பு அறுவடைக்காக நவீன இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உடுமலை அருகே மடத்துக்குளம், கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. 60 ஆண்டுகள் கடந்த நிலையில் உள்ள ஆலையில் உள்ள இயந்திரங்கள், அடிக்கடி பழுதடைந்து விடுவதால் ஆலையின் உற்பத்தித் திறன் குறைந்து வருகிறது.

நடப்பாண்டு கரும்பு அரவைப் பணிகள் நடைபெற்றபோது, உரிய நேரத்தில் கரும்பு வெட்ட ஆட்களை அனுப்பாதது, வெட்டிய கரும்பை 10 நாட்களுக்கு மேலாக காத்திருக்க வைத்ததால் கரும்பின் எடை குறைந்தது, தனியார் ஆலைகளுக்கு திருப்பி விட்டது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

எனினும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை ஆலை நிர்வாகம் வழங்கிவிட்டது. தமிழகத்தின் முதல் கூட்டுறவு ஆலை என்ற பெயரை காக்கும் வகையில் ஆலை புனரமைப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கி அரசு தனிகவனம் செலுத்த வேண்டும். நடவில் தொடங்கி அறுவடை வரை அனைத்திலும் நவீன முன்னெடுப்புகளை தொடங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இது குறித்து ஆலை நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாவட்டம் சூலூர், சுல்தான்பேட்டை, திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக் குளம், தாராபுரம், திண்டுக்கல் மாவட்டம் பழநி, ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 5,000 விவசாயிகள், அமராவதி சர்க்கரை ஆலையால் பயனடைந்து வருகின்றனர். சுமார் 3,000 ஏக்கரில் விளைவிக்கப் படும் ஒரு லட்சம் டன் கரும்பு ஆலை மூலம் அரவை செய்யப்பட்டு, சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது.

மத்திய அரசின் மானிய திட்டத்துக்காக விநியோகிக்கப்படுகிறது. நடப்பாண்டு அரவைப் பணிகள் நடைபெற்றபோது பலமுறை இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. அடுத்த அரவையின்போது இயந்திரம் பழுதாகாமல் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புனரமைப்புப் பணிகளுக்காக மாநில சர்க்கரை துறை ஆணையம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

உடனடியாக பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதால், விவசாயிகள் மனதில் புது நம்பிக்கை எழுந்துள்ளது. அந்த வகையில் அடுத்த ஆண்டு சுமார் 1,600 ஏக்கர் கரும்பு பதிவு செய்யவும், சுமார் 50,000 டன் கொள்முதல் செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 600 ஏக்கர் கரும்பு பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு 42,500 டன் கரும்பு அரவைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் விவசாயிகளுக்கு ரூ.11 கோடி பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கடைசி 10 நாட்கள் விநியோகம் செய்த வகையில் ரூ.1 கோடி மட்டும் நிலுவையில் உள்ளது. அதுவும் வெகு விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

வழக்கமான நடவு முறையை மாற்றி, நான்கரை அடி நீள அகலத்தில் நடவு செய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதனால் ஆட்கள் தட்டுப்பாடு பிரச்சினையை எளிதாக வென்று, இயந்திரம் மூலம் தானியங்கி அறுவடை அமல்படுத்த இயலும். படிப்படியாக இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறைவேறும். அமராவதி ஆலை மீண்டும் புத்துயிர் பெறும், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE