“தமிழகத்தில் 2 ஆண்டுகளில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் 3 மடங்கு உயர்வு” - முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: "கடந்த 2021 மார்ச் மாத நிலவரப்படி, சுமார் 2300 ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்கள் மட்டுமே தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் எடுத்த முயற்சிகளின் பலனாக, இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மடங்காகி இப்போது 6800-க்கும் மேல் உயர்ந்திருக்கிறது" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் கொடிசியா வளாகத்தில் நடைபெறும் “தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் திருவிழா” தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்தபடி காணொலி வாழியாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது முதல்வர் பேசியது: "தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் நடத்துகிற "தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் திருவிழா" நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அமைச்சர் பெருமக்கள், அரசு உயர் அலுவலர்கள், தொழில் முனைவோர் என அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தவிர்க்க முடியாத சில காரணங்களால் என்னால் நேரில் கலந்து கொண்டு உங்களோடு பேச முடியவில்லை. அதில் எனக்கு வருத்தம்தான். ஆனாலும் என்னோட எண்ணங்கள் முழுக்க அங்கே தான் இருக்கிறது.

இந்தத் துறையின் கடந்த இரண்டு ஆண்டுகால வளர்ச்சிக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசனின் உழைப்பே சான்று. கல்வி சிறந்த தமிழ்நாடு; கலைகள் சிறந்த தமிழ்நாடு என்பதுபோல தொழில்கள் சிறந்த தமிழ்நாடு என்கிற நிலையை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டு இருக்கிறோம். பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளுடனான தொழில்நிறுவனங்கள் முக்கியம்தான். ஆனால், சிறு - குறு தொழில்களின் வளர்ச்சி அதைவிட முக்கியமானது.

அந்த வகையில், தொழில் வளர்ச்சியில் தமிழகத்தின் திராவிட மாடல் அரசு அக்கறை செலுத்துகிறது. இந்த ஒருங்கிணைந்த வளர்ச்சியில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் பங்கு முக்கியமானது. தமிழகத்தின் உட்கட்டமைப்பையும் தொழில்கட்டமைப்பையும் மேம்படுத்தியவர் கருணாநிதி. அவருடைய நூற்றாண்டில் "சமூகநீதியுடன் கூடிய சமச்சீர் தொழில் வளர்ச்சி" என்ற அடிப்படையில் இதுவரை நடக்காத அளவு பிரம்மாண்டமாக பல்வேறு புத்தொழில் வளர்ச்சி சார்ந்த கருத்தரங்குகளையும், கண்காட்சியையும் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து, அமைச்சர் என்னிடம் கூறியபோது, இந்த நிகழ்ச்சியை நான் கோவையில நடத்த அவரைக் கேட்டுக் கொண்டேன். ஏன்னென்றால் கோவைதான் தென்னிந்தியாவின் மான்செஸ்டர்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில், சுமார் 450 அரங்குகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட்டு, அதைப் பார்வையிட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களும், ஆர்வலர்களும், மாணவர்களும் வர இருக்கிறார்கள். அதேபோல், புத்தாக்கங்கள், புத்தொழில்கள் மற்றும் முதலீடுகள் பற்றி நடக்க இருக்கிற கருத்தரங்குகள், சந்திப்புகளில் பங்கேற்க, சுமார் 1,500 பங்கேற்பாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்ட வல்லுநர்களின் கருத்துரைகள் இடம்பெற இருக்கிறது. இது பிரமிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இங்கு வருகை தந்திருக்கிற முதலீட்டாளர்கள் எல்லோரையும் மனதார வரவேற்கிறேன்.

புத்தாக்கங்கள் மற்றும் புதுயுகத் தொழில் முனைவை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகவும் கொண்டு, இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு "Tamil Nadu Startup and Innovation Mission” உயிர் கொடுக்கப்பட்டு, பல்வேறு செயல்திட்டங்கள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருவது உங்களுக்கு நன்றாக தெரியும்.

2021 மார்ச் மாத நிலவரப்படி, சுமார் 2,300 ஸ்டார்ட்அப்’ நிறுவனங்கள் மட்டுமே தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தப் பிறகு எடுத்த முயற்சிகளின் பலனாக, இந்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மடங்காகி இப்போது 6,800-க்கும் மேல் உயர்ந்திருக்கிறது. எந்தத் துறையாக இருந்தாலும், அதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும். அதற்காக இந்த அரசு எடுக்கிற முயற்சிகளுக்குத் துணை நிற்கின்ற வகையில், இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கிறது. இது தொடர வேண்டும்.

புத்தாக்க சிந்தனையோடு தொழில் முனைவில் ஈடுபடுகிற, தொடக்க நிலை புத்தொழில் நிறுவனங்களுக்கு, ‘டான்சீட்’ எனும் தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 109 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம், ரூ.10 கோடிக்கும் மேல், நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது.

புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, பெரு நகரங்களைத் தாண்டி, மாநிலத்தின் எல்லா பகுதிகளையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, கடந்த 2022 -23 ஆம் நிதி ஆண்டு மதுரை, ஈரோடு மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் வட்டாரப் புத்தொழில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளது. மேலும், நடப்பு நிதி ஆண்டில் சேலம், ஓசூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களிலும் வட்டாரப் புத்தொழில் மையங்கள நிறுவிட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த முன்னெடுப்பில், சமூக நீதியை நிறைவேற்றும் வகையில், இந்தியாவிற்கே முன்னுதாரணமாக ஆதிதிராவிட மக்களால் நிறுவப்படுகிற புத்தொழில் நிறுவனங்களுக்கு, பங்கு முதலீடாக வழங்க, கடந்த நிதி ஆண்டு ரூ.30 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு, இந்தத் திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இந்த நிதி ஆண்டு, இந்த சிறப்பு நிதி ரூ.50 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

புதுயுகத் தொழில் முனைவில் ஈடுபடுகிற, தொழில் முனைவோர்களுக்கு தகுந்த வழிகாட்டுதல்கள் அவசியம் என்பதால், தகுதி வாய்ந்த Mentor-களையும், தொழில் முனைவோர்களையும் இணைப்பதற்காக, "Mentor TN" என்ற வழிகாட்டி மென்பொருள் தளத்தையும் தொடங்கியிருக்கிறாம். மேலும், முதலீட்டாளர்களையும், புத்தொழில் முனைவோர்களையும் இணைப்பதற்காக, முதலீட்டாளர் இணைப்புத் தளம் தொடங்கப்பட்டு, அதன் வழியாக, பல முதலீட்டாளர் - தொழில் முனைவோர் இணைப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

துணிகர முதலீடுகளை ஈர்ப்பதில், கடந்த ஜூலை மாதத் தரவுகள் அடிப்படையில், இந்திய நகரங்களிலேயே சென்னை முதலிடத்தில் இருக்கிறது. மந்தமான முதலீட்டுச் சூழலிலும் சென்னை சார்ந்த நிறுவனங்கள் மேல் முதலீட்டாளர்கள் வைத்திருக்கிற நம்பிக்கையை இது காட்டுகிறது.

இந்த நம்பிக்கைக்கு காரணம், தமிழக மக்கள் நம் மேல் நம்பிக்கை வைத்து வழங்கிய ஆட்சி அதிகாரம்தான். அதிகாரத்தை வானளாவியதாக நான் எப்போதும் கருதுவதில்லை. திருக்குறளில் இருக்கிற அதிகாரங்கள் போல் நெறிப்படுத்தி வழிகாட்டுவதாகத்தான் கருதுகிறேன். மக்கள் நம்மேல் வைத்திருக்கிற நம்பிக்கையை காப்பாற்ற தான் அதிகாரங்கள் பயன்பட வேண்டும் என்று நினைத்து செயல்பட்டு வருகிறேன்.

புத்தொழில் முனைவோர்களுக்கு, உலகளாவிய முதலீடு மற்றும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நோக்கத்தோடு, உலக வர்த்தக மையமாக மாறிவரும் துபாயில், ஒருங்கிணைப்பு மையம் ஒன்று அமைக்கப்பட இருக்கிறது. நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகுதான், மத்திய அரசின் `ஸ்டார்ட்அப் இந்தியா’ அமைப்பு வழங்குகிற `லீடர்’ அங்கீகாரம், தமிழகத்துக்கு கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நீங்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து இருப்பது, நம்முடைய அரசின் பல செயல்திட்டங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது.

நம்முடைய தமிழகத்தை புத்தொழில் நிறுவனங்களுக்கேற்ற மாநிலமாக மாற்றி, உலகின் முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என்று சொல்லி, உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு முதல்வர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

17 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

10 days ago

வணிகம்

10 days ago

மேலும்