கோவையில் 2 நாள் ‘ஸ்டார்ட் அப்’ திருவிழா - சலுகைகளை அள்ளும் நிறுவனங்கள்

By இல.ராஜகோபால்

கோவை: பல்வேறு துறைகளில் புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தமிழக அரசு சார்பில் ‘ஸ்டார்ட் அப் திருவிழா’ என்ற பெயரில் தொழில் முனைவோருக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் இன்று (ஆக.19) முதல் 2 நாட்கள் நடைபெறுகிறது.

இது குறித்து தமிழக அரசின் ஸ்டார்ட் அப் ஊக்குவிப்பு திட்டத்துக்கான ஆலோசகர் மற்றும் தென்னிந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜலபதி கூறியதாவது: ‘ஸ்டார்ட் அப்’ என்றால் புதுமையான யோசனைகளால் தொழில்துறையில் சாதனை ஏற்படுத்தும் வகையில் திட்டங்களை செயல்படுத்துவது என்பதாகும். ‘ஸ்டார்ட் அப்’ தொழில்களை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வரிச்சலுகைகளை வழங்குகின்றன.

தொழில்முனைவோர் முதல்கட்டமாக தங்களின் ஸ்டார்ட் அப் நிறுவனம் குறித்து மத்திய அரசிடம் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்வதால் தொழில் தொடங்குவது தொடர்பாக வெளிநாடுகளில் நடைபெறும் கண்காட்சிக்கு செல்வது, டிரேட் மார்க் பதிவு, அரசு டெண்டர் நிபந்தனைகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சலுகைகள் பெறுவது உள்ளிட்ட பல்வேறு அரசு உதவிகளை பெறலாம்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு முதல் 3 ஆண்டுகள் வரிச்சலுகை உள்ளிட்ட மத்திய, மாநில அரசு சார்பில் பல்வேறு நிதியுதவி பெறலாம். உதாரணத்திற்கு, ரூ.10 லட்சம் முதலீட்டில் புதுமையான பொருள் உற்பத்தி செய்பவராக இருந்து அரசால் அங்கீகாரம் பெறப்பட்டால் முதலீட்டு தொகை அனைத்தும் கடனாக இல்லாமல் இலவசமாக வழங்கப்படும்.

அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது, அன்னிய செலாவணியை அதிகரிக்க உதவி உள்ளிட்ட தொழில் நிறுவனங்களை தொடங்கினால் அவை அனைத்தும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களாகவே கருதப்படும். புதுமையான யோசனைகள் மட்டுமின்றி சமுதாயத்துக்கு உதவும் நோக்கில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை செயல்படுத்தி அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய அனைத்து தொழில் திட்டங்களுக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக அங்கீகாரம் வழங்கப்படும்.

கழிவுநீர் தூய்மைப் பணி, ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்பது, பனைமரம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேவைப் படும் புதுமையான அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய ஸ்டார்ட் அப் திட்டங்கள் அனைத்தும் பெரிய மற்றும் முக்கிய திட்டங்களாக அங்கீகரிக்கப்பட்டு தேவையான நிதியுதவி அளிக்கப்படும்.

தமிழக அரசின் எம்எஸ்எம்இ தொழில்துறையின் கீழ் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கென தனி மையம் ‘ஸ்டார்ட் அப் இன்னோவேசன் சென்டர்’ என்ற பெயரில் செயல்படுகிறது. செயலாளராக அருண்ராய், முதன்மை செயல் அதிகாரியாக சிவராஜா ராமநாதன் ஆகியோர் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட வளர்ந்த மாவட்டங்களை தவிர்த்து திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், ஓசூர், ஈரோடு உள்ளிட்ட பல இடங்களில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான மண்டல மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையை தவிர்த்து கோவை உள்ளிட்ட அனைத்து இரண்டாம் கட்ட நகரங்களிலும் தொழில்துறையை வளர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தமிழகத்தில் முதல்முறையாக ஸ்டார்ட் அப் திருவிழா இன்றும் நாளையும் கோவையில் நடத்தப்படுகிறது.

முதல் தலைமுறை தொழில்முனைவோர், தொழில்துறையில் சாதனை படைத்தவர்கள், உதாரணமாக கல்வித்துறையில் சாதனை படைத்து வரும் சங்கர் வாணவராயர், எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் சிறந்து விளங்கும் ஹேமலதா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.

இவை எல்லாவற்றுக்கும் மேல் தொழில் முதலீடுகளுக்கு உதவும் நிதி முதலீடு செய்யும் நிறுவனங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள கண்காட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பங்கேற்பதன் மூலம் விழிப்புணர்வு, வல்லுநர்களின் ஆலோசனைகளை பெறுதல், நிதி முதலீட்டாளர்களை சந்தித்து பேசுதல், யோசனைகளை பரிமாறிக்கொள்ளுதல் உள்ளிட்டவற்றுடன் தங்களுக்கு உள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இன்றும், நாளையும் கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில்‌ நடைபெற உள்ள தமிழ்நாடு ஸ்டார்ட்‌ அப்‌ திருவிழாவில் 450-க்கும்‌ மேற்பட்ட அரங்குகள்‌ அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில்‌ பங்கேற்க 1,500-க்கும் மேற்பட்டோர்‌ முன்பதிவு செய்துள்ளனர்‌. 50-க்கும்‌ மேற்பட்ட வல்லுநர்களின் சிறப்புரை மற்றும் கலந்துரையாடலுடன் கூடிய கருத்தரங்கு‌ நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE