169 நகரங்களுக்கு 10,000 மின்சாரப் பேருந்துகள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 10,000 மின்சாரப் பேருந்துகள் மூலம் நகரப் பேருந்துகளின் இயக்கத்தை மேம்படுத்தும் ‘பிரதமரின் மின்சார பேருந்து சேவை’ என்ற பேருந்துத் திட்டத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு ரூ.57,613 கோடி செலவாகும். இதில் ரூ.20,000 கோடி நிதியை மத்திய அரசு வழங்கும். இத்திட்டம் 10 ஆண்டுகளுக்கு பேருந்து இயக்கத்துக்கு உறுதுணையாக இருக்கும்.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு பிராந்தியம் மற்றும் மலைப் பிரதேச மாநிலங்கள் உள்ளிட்ட 3 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களை இத்திட்டம் உள்ளடக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் போதிய பேருந்து சேவை இல்லாத நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கம்: நகரப் பேருந்து சேவையில் சுமார் 10,000 பேருந்துகளை ஈடுபடுத்துவதன் மூலம் 45,000 முதல் 55,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்தத் திட்டத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. அவை.

பிரிவு ஏ-நகரப் பேருந்து சேவைகளை அதிகரித்தல்: (169 நகரங்கள்) - அங்கீகரிக்கப்பட்ட பேருந்து திட்டம் பொது மற்றும் தனியார் கூட்டாண்மை மாதிரியில் 10,000 மின்சார பேருந்துகளுடன் நகரப் பேருந்து நடவடிக்கைகளை அதிகரிக்கும்.

தொடர்புடைய உள்கட்டமைப்பு பேருந்து பணிமனை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஆதரவை வழங்கும்; மற்றும் மின்சாரப் பேருந்துகளுக்கான மின்கட்டமைப்பை (துணை மின் நிலையம் போன்றவை) உருவாக்கும்.

பிரிவு பி-பசுமை நகர்ப்புற இயக்கம் முன்முயற்சிகள்: (181 நகரங்கள்): பேருந்துக்கான முன்னுரிமை, உள்கட்டமைப்பு, பன்முனை வசதிகள், மின்னேற்றி நிலையங்கள் உள்கட்டமைப்பு போன்ற பசுமை முன்முயற்சிகளை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரயில்வே: இந்திய ரயில்வேயில் 100 சதவீத மத்திய அரசு நிதியுதவியுடன் சுமார் 32,500 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 2,339 கி.மீ. தூரத்துக்கான 7 பல வழித்தட திட்டங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டங்களால் போக்குவரத்து எளிதாவதுடன் நெரிசல் குறையும், இந்திய ரயில்வேயின் பரபரப்பான பிரிவுகளில் தேவைப்படும் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டினை இத்திட்டங்கள் வழங்கும்.

உத்தரப் பிரதேசம், பிஹார், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் என 9 மாநிலங்களில் உள்ள 35 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த திட்டங்களால் இந்திய ரயில்வேயில் தற்போதுள்ள ரயில் பாதை கட்டமைப்பில் 2339 கி.மீ. தூரத்தை அதிகரிக்கும். இம்மாநிலங்களில் உள்ள மக்களுக்கு 7.06 கோடி மனித நாட்கள் வேலைவாய்ப்பையும் வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE