நாட்டின் சில்லறை பணவீக்கம் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவில் 7.44% ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நுகர்வோர் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் சில்லறை பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் 7.44 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் சில்லறை பணவீக்கம் கடந்த 15 மாதங்களில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மேலும், இது கடந்த ஜூன் மாதம் பதிவான 4.87 சதவீதம் சில்லறை பணவீக்கத்தை ஒப்பிடுகையில் மிக மிக அதிகமாகும்.

சிபிஐ (Consumer Price Index) எனப்படும் நுகர்வோர் விலைக் குறையீடு ரிசர்வ் வங்கியின் நிர்ணய வரம்பான 6 சதவீதத்தைக் கடக்கும் என்றே பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தனர். ஆனால் பொருளாதார நிபுணர்கள் கணித்ததைவிட சில்லறை பணவீக்கம் மிகமிக அதிகமாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் 2 முதல் 6 சதவீதம் வரை இருக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டைக் கடந்து சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

காரணம் என்ன? - கடந்த சில மாதங்களாக காய்கறி விலை கடுமையாக உயர்ந்ததே சில்லறை பணவீக்கம் இவ்வாறாக அதிகரிக்கக் காரணம் எனக் கூறப்படுகிறது. கூடவே அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களின் விலை ஏற்றமும் சில்லறைப் பணவீக்கம் உயர்வுக்கு வழிவகுத்துள்ளது. காய்கறி, தானியங்கள் விலை அதிகரிக்க நாடு முழுவதும் பரவலாக பெய்த மழை காரணமாக இருக்கின்றது. சில இடங்களில் பருவம் தவறிய மழை, வறட்சி ஆகிய காரணங்களால் பயிர்கள் சேதமடைந்து விலைவாசி உயர்ந்துள்ளது. இதனால் சமையலுக்கு மிகமிக அத்தியாவசியமான தக்காளி போன்ற காய்கறிகளின் விலை அதிகரித்தது. இதுதான் சில்லறை பணவீக்கம் மிக மோசமான அளவுக்கு அதிகரிக்கக் காரணம் என்று நிபுணர்கள் விளக்குகின்றனர்.

ஜூலை மாதத்துக்கான கிராமப்புற சில்லறை பணவீக்கம் 7.63 சதவீதமாக இருக்கிறது. நகர்ப்புற சில்லரை பணவீக்கம் 7.20 சதவீதமாக உயர்ந்துள்ளது என்ற பிரேக் அப் புள்ளிவிவரமும் வெளியாகியுள்ளது.

ஆர்பிஐ நடவடிக்கை எடுக்கும்- இந்தச் சூழலில் ஆர்பிஐயின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அண்மையில் நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழு கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடர இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இருப்பினும், "பணவீக்கத்தின் தீவிரம் இன்னும் குறையவில்லை. பணவீக்கத்தை 4 சதவீதத்துக்குள் கொண்டுவருவது அவசியம். பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், ரெப்போ விகிதத்தில்உரிய மாற்றம் மேற்கொள்ளப்படும்" என்று ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சில்லறை பணவீக்கம் 15 மாதங்கள் இல்லாத உச்சத்தை எட்டியிருப்பதால் ஆர்பிஐயின் நடவடிக்கை மீது கவனம் திரும்பியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE