போன் பே, கூகுள் பே-க்கு ‘கவலை’ தரும் UPI Plugin சிறப்பு அம்சம் என்ன?

By செய்திப்பிரிவு

சென்னை: யுபிஐ செயலிகளைக் காட்டிலும் துரிதமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள ‘யுபிஐ பிளக்-இன்’ உதவுவதாக சொல்லப்படுகிறது. அதன் காரணமாக போன் பே மற்றும் கூகுள் பே போன்ற யுபிஐ செயலிகள் கவலை கொண்டுள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது யுபிஐ பேமென்ட். இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது. நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ செயல்பாட்டில் உள்ளது. இதனால், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. கூகுள் பே, போன் பே, அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.

இந்தச் சூழலில் யுபிஐ பிளக்-இன் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் (என்பிசிஐ) மற்றும் மெர்சன்ட்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதன்மூலம் இந்திய யுபிஐ பரிவர்த்தனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் யுபிஐ செயலிகளுக்கு நேரடியாக போட்டி எழுந்துள்ளது. குறிப்பாக போன் பே மற்றும் கூகுள் பேவுக்கு யுபிஐ பிளக்-இன் நேரடியாக போட்டிபோடும் எனத் தெரிகிறது. இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை சந்தையில் போன் பே 47 சதவீதம், கூகுள் பே 33 சதவீதமும் பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுபிஐ பிளக்-இன்: யுபிஐ பிளக்-இன் அல்லது சாஃப்ட்வேர் டெவலெப்மென்ட் கிட் (SDK) என அறியப்படும் இதன் ஊடாக ஆன்லைன் மெர்சன்ட்கள், தங்கள் பயனர்களிடம் இருந்து பணம் பெற வெர்ச்சுவல் பேமென்ட் அட்ரஸ் ஒன்றை சேர்த்து, யுபிஐ செயலிகளின் உதவியின்றி நேரடியாக பணம் பெற முடியும்.

இப்போது ஸ்விகி செயலியில் பயனர் ஒருவர் தான் ஆர்டர் செய்த உணவுக்கு யுபிஐ மூலம் பணம் செலுத்த அதிலிருந்து போன் பே அல்லது கூகுள் பே போன்ற யுபிஐ செயலிகளை தேர்வு செய்து பணம் செலுத்தலாம். அதற்கு அவர்கள் இந்தச் செயலிக்குள் செல்ல வேண்டி இருக்கும். பேமென்ட் செய்த பிறகு மீண்டும் ஸ்விகி செயலிக்கு பயனர்கள் வரலாம். சமயங்களில் இந்த முறையில் பேமென்ட் ஃபெயிலியராக வாய்ப்புள்ளது.

அதுவே யுபிஐ பிளக்-இன் மூலம் பயனர்கள் ஸ்விகி செயலியில் இருந்தபடியே பேமென்ட் மேற்கொள்ள முடியும். மெர்சன்ட்களுக்கு இந்த எஸ்டிகே ஆப்ஷனை பேடிஎம், ரேசர்பே மற்றும் ஜஸ்பே போன்ற நிறுவனங்கள் உதவுவதாக தகவல். வரும் நாட்களில் இந்த முயற்சியை ஆன்லைன் மெர்சன்ட்கள் அதிகளவில் முன்னெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE