ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி விவகாரம்: வீட்டை எழுதி தர கோரி தீபக் கோச்சார் மிரட்டல் - சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி விவகாரத்தில் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத்திடம் அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையை எழுதி தரச்சொல்லி மிரட்டியது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை வாயிலாக தெரியவந்துள்ளது.

ரூ.3,250 கோடி கடன் மோசடி வழக்கில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் குழும தலைவர் வி.என். தூத் உள்ளிட்டோர் மீது சிபிஐ 11,000 பக்க குற்றபத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில், அடுக்குமாடி குடியிருப்பு உரிமை விவகாரம் தொடர்பாக வி.என். தூத் மற்றும் தீபக் கோச்சார் ஆகியோருக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிசிஐ சேம்பர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையை தனது குடும்பத்துக்கு மாற்ற வேண்டும். இல்லையெனில், ஐசிஐசிஐ வங்கியில் உள்ள வீடியோகான் குழுமக் கணக்குகளை வாராக் கடனாக (என்பிஏ) சந்தா கோச்சார் அறிவித்துவிடுவார் என தூத்தை தீபக் கோச்சார் மிரட்டியுள்ளார்.

இதற்கு, இப்பிரச்சனை எதிர்காலத்தில் பூதாகரமாக வெடித்தால் ஒரு நாள் சந்தா கோச்சார் இந்திராணி முகர்ஜியுடன் சிறையில் அடைக்கப்பட நேரிடும். எனவே, அதுபோன்று செய்ய வேண்டாம் என்று தீபக்கிடம் தூத் அறிவுறுத்தியுள்ளார். இதனை கேட்டு கடும் கோபமடைந்த தீபக் கோச்சார், தான் சொன்னபடி கேட்காவிட்டால் தூத்தை அழித்துவிடுவதாக தீபக் மிரட்டியதாக குற்றப்பத்திரிகையில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஊடக நிர்வாகியான இந்திராணி முகர்ஜி, கடந்த 2012-ம் ஆண்டில் தனது மகள் ஷீனா போராவைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். குடியிருப்பு உரிமை மாற்றம் தொடர்பான மோசடி வெளியில் தெரியவந்தால் இந்திராணி முகர்ஜி இருக்கும் சிறை அறையில் சந்தா கோச்சரும் அடைக்கப்பட நேரிடும் என்று தீபக் கோச்சாருக்கு தூத் எச்சரிக்கை செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE