மூலப் பொருட்கள் விலை குறைய தொடங்கியதால் வார்ப்படம், மோட்டார் பம்ப்செட் தொழிலில் முன்னேற்றம்

By இல.ராஜகோபால்

கோவை: கோவை மாவட்டத்தில் வார்ப்படம் (காஸ்டிங்) உற்பத்தி தொழிலில் 600-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

மூலப்பொருட்களின் விலை குறைந்து வருவதாலும், கார் மற்றும் கனரக வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளதாலும், வார்ப்பட தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தி இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியன் பவுண்டரிமென் (ஐஐஎப்) தென் மண்டல தலைவர் முத்துகுமார் மற்றும் கோவை கிளையின் முன்னாள் தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் வார்ப்பட தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களில் 90 சதவீதத்தினர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள். சொந்த ஊர்களுக்கு சென்ற அனைவரும் கோவை திரும்பி விட்டனர். கடந்த இரண்டு மாதங்களாக டிராக்டர் விற்பனை மந்தமாக உள்ளது. இந்த மாதம் முதல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகள் கார் மற்றும் கனரக வாகனங்கள் விற்பனை சிறப்பாக உள்ளதால் வார்ப்பட தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மோட்டார் மற்றும் பம்ப்செட் துறைகளும் முன்னேற்றத்தை எட்ட தொடங்கியுள்ளன. மூலப்பொருட்கள் விலை மெல்ல குறைய தொடங்கியுள்ளன. உற்பத்தி செலவு குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர்.

காற்றாலை மின் உற்பத்தி காரணமாக தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இவை அனைத்தும் வார்ப்பட தொழில் வளர்ச்சிக்கு உதவுகின்றன. நாட்டின் உள்நாட்டு உற்பத்தி விகிதம் (ஜிடிபி) கடந்த 2021-ம் ஆண்டு முதல் சரிவிலிருந்து மீள தொடங்கியுள்ளது. பல்வேறு உலக நாடுகளின் ஜிடிபி பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் ஜிடிபி 6.1 சதவீதம் என்ற நிலையான வளர்ச்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் மின்சாரத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் மின் உற்பத்தி 75 சதவீதம் அதிகரிக்கும். இதில், சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத் தக்க ஆற்றல் உற்பத்தித் துறை மிக முக்கிய பங்கு வகிக்கும். வார்ப்பட தொழிலில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இருப்பினும் இந்தியா இத்துறையில் சிறப்பான வளர்ச்சியை தக்கவைத்துள்ளது.

அலுமினியம், காஸ்டிங் தேவை மிக அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மனி மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகள் ஆட்டொ மொபைல் துறையில் சரிவில் இருந்து மீண்டு வரும். உலகளவில் நடத்தப்பட்டு வெளியிடப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் அடிப்படையில் இந்தியா மற்றும் சீனா நாடுகள் வார்ப்பட தொழில் வளர்ச்சியில் மிக சிறந்த வளர்ச்சியை பெறும் என நம்பப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE